யுபிஐ மூலம் பணம் 
செய்திக் கட்டுரை

இது புதுசு... ஸ்கேன் செய்தால் பணம் கிடைக்கும்!

Staff Writer

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை என்பதைப் போலக் கேட்கத் தோன்றும்தான்.

தெரு முனையில் 10/ 12 ரூபாய்க்கு ஒரு டீ குடித்தால்கூட, நம் மக்கள் உடனே ஜிபே-வோ வேறு ஏதோ பேமண்ட் செயலியைக் காட்டி பணம் செலுத்துவது, சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.

அந்த அளவுக்கு ரொக்கமாகப் பணத்தை வெளியே எடுத்துச் செல்லாமல், எந்த வகைக் கடையாக இருந்தாலும் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் செலுத்தல் முறை மூலம் எளிதாகப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடிகிறது.

இதே முறையின் மூலம், பணத்தை எடுத்துக்கொள்ளவும் விரைவில் வசதி வரப்போகிறது. இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் தேசிய பணம்செலுத்துகை நிறுவனம்- என்பிசிஐ கோரியிருக்கிறது. அதாவது, வங்கிக்குச் செல்லாமல், தங்கள் ஊர்களிலேயே பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி, இந்த முறை.

அது எப்படி?

ஏற்கெனவே, நடைமுறையில், வங்கிகளின் வணிகத் தொடர்பாளர்கள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் யாரும் இவர்களின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளன.

ஒன்று, இந்த வங்கி வணிகத் தொடர்பாளர்கள் கொண்டுவரும் சின்ன ஏடிஎம் இயந்திரங்களில் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்வது. மற்றது, ஆதாரின்படி செயல்படக்கூடிய முறை. இதில், வணிகத் தொடர்பாளர் வைத்திருக்கும் சிறிய ஸ்கேனரில் விரல் ரேகையைப் பதியவேண்டும். அதைப் பதிந்ததும் பணம் பெற்றுக்கொள்ள வேண்டியவரின் வங்கிக் கணக்கோடு தொடர்பை ஏற்படுத்தி, அதோடு இணைக்கப்பட்ட ஆதார் ஆள் அடையாளங்களை ஒப்பிட்டு சரிபார்த்துச் சொல்லிவிடும். அதையடுத்து கேட்ட தொகையை வணிகத் தொடர்பாளர் தருவார்.

நாடளவில் வங்கிகள் இல்லாத ஊர்களில், நகர்ப்புறத்தில் உள்ள இடங்களில் இப்படியான வணிகத் தொடர்பாளர்கள் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் முறை இருந்துவருகிறது. வங்கிச்சேவை இல்லாத இடங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்கும் முயற்சி என்று சொல்லமுடியும்.

இந்த முறையில்தான் இப்போது யுபிஐ வசதியைக் கொண்டுவர உள்ளனர். நாடளவில் இதற்காக 20 இலட்சம் வணிகத் தொடர்பாளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்படவுள்ளனர். பொதுவாக, இப்போது ஒரு வங்கிக் கிளைக்கு இரண்டுமூன்று பேர் தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். எண்ணிக்கை பெரும் அளவுக்குக் கூடும்போது உருவாகும் பலனைக் கொஞ்சமாவது கற்பனை செய்துபார்க்க முடியும்.

உத்தேச முறையின்படி, வணிகத் தொடர்பாளர்களிடம் கொடுக்கப்படும் இயந்திரத்தில் கியூஆர் கோட் இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் பணம் பெறவேண்டியவரின் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட பணம் எடுக்கப்பட்டதாகப் பதிவாகும். அதையடுத்து, வணிகத் தொடர்பாளர் தன் இயந்திரத்திலிருந்து குறிப்பிட்ட பணத்தை வழங்குவார்.

( சில வேளைகளில் இப்படி உறுதியாகாமலும் போகும்; அப்போது வணிகத் தொடர்பாளர் பணத்தைத் தரமாட்டார். இதனால் அவருக்கும் வாடிக்கையாளருக்கும் சிக்கல் வருவதுண்டு. குறிப்பிட்ட வங்கியில் முறையிட்டு வாடிக்கையாளர் தன் பணத்தை மீட்டுக்கொள்ளலாம் என்பது தனி)

புதிய முறை நடைமுறைக்கு வரும்போது, தற்போதைய விரல்ரேகை பிரச்னை முக்கியமாகத் தீரும் என்கிறார்கள், வங்கியாளர்கள்.

இப்போது விரல்ரேகையைப் பதிவுசெய்தால்தான் வங்கியின் வணிகத் தொடர்பாளர் பணம் தருவார். ரேகை வைக்க வணிகத் தொடர்பாளர் இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் செல்வது இப்போது அவசியம். இதிலும் விரல் ரேகை சரியாகப் பதியாமல் போனால், அவர் வாடிக்கையாளருக்கு பணம் தரமுடியாமல் போகும். முதியவர்கள், உடல் முடியாதவர்கள் புதிய முறைப்படி நேரடியாகச் செல்லவேண்டியது இல்லை. அவர்கள் வேறு நபர்களை அனுப்பி தங்கள் யுபிஐ குறியீட்டின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 2016இல் இந்தியாவில் யுபிஐ முறையைக் கொண்டுவந்த தேசிய பணம் செலுத்துகை நிறுவனம், பத்தாவது ஆண்டுக்குள் ஸ்கேன் செய்தால் பணம் பெறக்கூடியதையும் சாத்தியப்படுத்த உள்ளது. இருபது இலட்சம் தொடர்பாளர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த வசதியைக் கொண்டுசெல்ல வாய்ப்பு உண்டு என உறுதிபடச் சொல்கிறார்கள், வங்கியியல் நுட்ப வல்லுநர்கள்.

ஆனாலும் எல்லா தொழில்நுட்பங்களைப் போல இதிலும் பாதக அம்சங்களும் உண்டு என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சைபர் குற்றங்கள் பெருகிவரும் நிலையில் இதில் அப்படி நேராமல் தடுக்கும் வழிமுறைகளையும் இப்போதே ஆராயவேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது.