வந்தாரை வாழவைக்கும் நகரம் சென்னை என்று சொல்வது ஒரு பக்கம் என்றால், வயதானோரை வரவேற்கும் நகரமாக உருவெடுத்துள்ளது கோவை மாநகரம்.
ஒரு பக்கம் தொழில் நகரமாக வளர்ந்துவந்தாலும், மறுபக்கம் குளிர்காற்றுடன் கூடிய மனதிற்கு இதமான வானிலையுடன், ஓய்வெடுக்க விரும்புவர்களை வரவேற்கிறது கோவை.
இந்தியாவின் மூத்த குடிமக்கள் வாழும் தலைநகராக மாறியுள்ளது தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை. இதற்கான மூலக் காரணமாக, இதன் வானிலை இருக்கிறது.
கோவையில் ஆண்டு முழுவதும் இதமான வானிலை நிலவுவதற்கான முக்கிய காரணம், அதன் புவியியல் அமைப்பே ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாய் வழியாக, அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று கோவைக்குள் எளிதாக நுழைகிறது. இந்த இயற்கை இடைவெளி கோடைக் காலத்திலும் மாலை வேளைகளில் நகரைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பொதுவாக, கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் இடங்களில், இயல்பாகவே வெப்ப நிலை குறைவாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 410 மீட்டர் உயரத்தில் இருப்பதால், தமிழ்நாட்டின் பிற கடலோர, சமவெளி நகரங்களை விட இங்கு இயல்பாகவே வெப்பம் குறைவாக இருக்கிறது.
மேலும், இரண்டு பருவமழைக் காலங்களிலும் மழையைப் பெறுவதால் பசுமையான சூழ்நிலை இங்கு உள்ளது.
கோவை மாவட்டத்தின் 33% பரப்பளவு இயற்கை காடுகளால் சூழப்பட்டுள்ளதால், சுற்றுப்புற வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகிறது.
தனது வாழ்நாளில், வேலை செய்யும் நாள்களை இந்தியாவின் பெரும் நகரங்களில் வாழும் மக்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரும்பாலானோர் அதே நகரங்களில் வாழ விரும்புவதில்லை. அவர்கள் தங்களது ஓய்வு காலத்தை ஒரு நல்ல வானிலையுடன் கூடிய சுகாதார வசதிகள், உட்கட்டமைப்புகள் இருக்கும் இடங்களில், அமைதியாக வாழ விரும்புகின்றனர்.
அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்து தரும் ஒரு நகரமாக தற்போது தமிழகத்தின் கோவை மாநகரம் உருவெடுத்துள்ளது.
கோவையில் மட்டும் நவீன, மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட 5,500 மூத்தோர் குடியிருப்பு இல்லங்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். நாட்டின் எந்தவொரு நகரத்தையும் விட இது மிக அதிகம்.
பொதுவாக இந்தியாவிற்கு 3,00,000 ஒழுங்கமைக்கப்பட்ட மூத்தோர் குடியிருப்பு இல்லங்கள் தேவை என்கிறார்கள், மூத்த குடிமக்களுக்கான ஆலோசனைக் கூட்டமைப்பை நடத்துபவர்கள்.
கடந்த காலங்களில் ரூ. 70 இலட்சத்திற்கு விற்பனையான மூத்தோர் குடியிருப்புகள், தற்போது ரூ. 3.5 கோடிவரை செல்கின்றனவாம்!
நம்நாட்டில் மூத்த குடிமக்கள் வாழிடச் சந்தையின் மதிப்பு மட்டும் 3.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக 2025 ஆண்டு கணக்கீடு சொல்கிறது. இது ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது!
மூத்த குடிமக்கள் என்றாலே யாரோ ஒருவரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையில் பாதுகாப்பான, வசதியான, அமைதியான சமூகத்தில் வாழ்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக, ஓய்வுபெறுவதற்கு முன்னரே இதுபோன்ற இடங்களைத் தேடிவைத்து விடுகிறார்கள்.
நல்ல வானிலை, கோவையின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போன்றவை பல்வேறு தரப்பினரையும் கோவையின் பக்கம் ஈர்க்கிறது.
சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல வசதியாக உள்ளதாலும், பெற்றோர்களை எளிதில் அணுகக்கூடிய கோவையில் குடியமர்த்த இளைய தலைமுறையினரும் விரும்புவதாலும், கோவையில் மூத்த குடிமக்களுக்கான வீடு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது! கோவையை அடுத்து பெங்களூரு, புனே போன்ற தென்னிந்திய நகரங்கள் முதியோர் வாழிட இல்லங்கள் வசதியில் முன்னணியில் உள்ளன.
கோவையை இனி முதியோர் தலைநகரம் எனலாமா?