கோவை ஜி.டி.நாயுடு பாலம் 
செய்திக் கட்டுரை

சர்ச்சையும் சாவதானமும்... கோவை புதுப் பாலப் பெயரில் ஜி.டி. (நாயுடு)!

அரசியல் செய்தியாளர்

சாதிப் பெயரில் பாலங்கள், நீர்நிலைகள் கூடாது என அரசாணை வெளியிட்ட மறுநாளே, கோவையில் திறக்கப்பட்ட புதிய பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

கோவையில் அவினாசிக்குச் செல்லும் சாலையில் புதியதாக 10 கி.மீ. மேம்பாலச் சாலை கடந்த 9ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டது. 

இதேநேரத்தில், அண்மையில் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், குளங்களின் பொது இடங்களின் பெயர்களில் சாதிக் குறிப்பீட்டை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் இப்பெயரை மையமாக வைத்து சர்ச்சை எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் தனித்தனியாக ஆளாளுக்கு கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில், தி.க. தலைவர் கி.வீரமணி நாயுடு எனும் சாதிப் பெயரை நீக்கக்கூடாது என அறிக்கைவிட்டதும், விவகாரம் சூடுபிடித்தது.

தமிழ்த் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் பெயரை சாதிப் பின்னொட்டு இருக்கக்கூடாது என்பதற்காக, உ.வே. சாமிநாதர் என்று தமிழக அரசு முன்னர் மாற்றியது. அதைப்போல, வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதை வ.உ.சிதம்பரனார் என்று மாற்றினார்கள். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் விமர்சனகாரர்கள், தி.மு.க. அரசு தேர்தலுக்காகத்தான் இப்படிச் செய்கிறது என்று சாடுகிறார்கள்.

அவர்கள் இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் கோட்டை எனக் கூறப்பட்டுவந்த கோவையில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஓர் இடம்கூடக் கிடைக்காதது, அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அப்படியொரு சரிவுக்கு நேர் எதிராக கோவை மாவட்டத்தின் பத்து தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் எனும் முனைப்போடு தி.மு.க. அணி அங்கே தீவிரமாகக் களப்பணிகளைச் செய்துவருகிறது.

சமூகரீதியில் கவுண்டர் சாதியினரும் தெலுங்கு பேசும் நாயுடு சாதியினரும் கணிசமாகப் பரந்துவசிக்கும் மாவட்டம், இது. இந்தப் பின்னணியில், அண்மையில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடத்தும் கே.கே.சி. பாலுவுக்கு விருது அறிவிக்கப்பட்டதை முடிச்சுப் போடுகிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

அத்துடன், பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் இருந்த அவினாசி பாலத்தையும் விரைவுபடுத்தி திறப்பு விழாவையும் நடத்தியதும் அதைவிட முக்கியமாக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை அதற்குச் சூட்டியதையும் வாக்கு வங்கி அரசியலோடு இணைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்.

இந்த சூழலில்தான், தி.மு.க.வை ஆதரிக்கும் தி.க. தலைவர் கி.வீரமணி, அந்த அமைப்பின் சாதியெதிர்ப்புக் கொள்கையை இதில் மாறுபட்டு வெளிப்படுத்தியிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிரவைத்திருக்கிறது.

பண்பாட்டியல் ஆய்வாளரும் தி.மு.க.வின் முரசொலி நாளேட்டின் முக்கியமான கட்டுரையாளருமான இராஜன்குறைகூட, வீரமணியின் கருத்தைப் பூடகமாக மறுத்துள்ளார். ”ஜி.டி. பாலம் என்றோ ஜி.துரைசாமி பாலம் என்றோ அழைப்பதுதான் சரியானது; பழகிவிடும். அரசியல் சரித்தன்மையை உயர்த்திப்பிடிப்போம்.” என்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல திராவிடர் இயக்கக் கருத்தாளரும் பதிப்பாளருமான கருப்பு நீலகண்டனும், “ ஜி.துரைசாமி (GD) அய்யா அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியத் துணைகண்டத்தை ஆச்சரியப்படுத்தியது தமது அறிவியல் அறிவால் உருவாக்கிய சாதனங்களாலேயே தவிர நாயுடு என்கிற பின்னொட்டால் அல்லவே அல்ல.” என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளில் நா.த.க. தலைவர் சீமான், “தெருப் பெயர்களில் சாதிப் பெயரை நீக்க உத்தரவிட்டுவிட்டு, கோவை அவினாசி பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா?” என்று கேட்டுள்ளார். கொங்கு மக்கள் கொண்டாடும் தீரன் சின்னமலையின் பெயரை ஏன் வைக்கவில்லை என்றும் சீமான் கொக்கி போட்டுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதில் புரியாமல் பேசுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அரசுத் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக அரசின் உத்தரவுக்கான நோக்கம் சாதி, பொருளாதாரரீதியில் யாரும் பாகுபாடாகக் கூறப்படுவதை இல்லாமல் ஆக்கவேண்டும் என்பதே தவிர, பாலத்தின் பெயரை பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றார். அப்படி அறியப்பட்ட ஒருவரை ஜி.டி.பாலம் என்றா குறிப்பிடமுடியும் என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் முன்னரே எதிர்க்கேள்வி விடுத்திருந்தார்!

இதைத்தான் தி.க. தலைவர் வீரமணியும் கேட்டுள்ளார்.

பல சமயங்களில் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராகக் கருத்துகளைக் கூறியுள்ள நிதியமைச்சர் தென்னரசு, இப்போது பேசியிருக்கிறார். ஆக, அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் பதில்கூற அவசரப்படவில்லை. சாவதானமாகத்தான் விசயத்தைக் கையாண்டுவருகிறது.

நிலவரத்தைப் பார்த்தால், இப்போதைக்கு இந்தப் பெயர் சர்ச்சை ஓயப்போவதில்லை என்பது மட்டும் உண்மை!