செய்திக் கட்டுரை

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஆ.இராசா- ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

இரா. தமிழ்க்கனல்

விஜய் அமைச்சரவையில் வி.சி.க. சேரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பகிரங்க வேண்டுகோள் விடுத்ததுமே, பிரச்னை தொடங்கிவிட்டது.

சமூக ஊடகங்களில் வி.சி.க.வையும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் கரித்துக்கொட்டத் தொடங்கிவிட்டார்கள், தி.மு.க. இணையப் படையினர். அதில், பெரும்பாலானவை அச்சில் ஏற்றமுடியாத ரகம்.

உச்சகட்டமாக, நேற்று நள்ளிரவு தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட கருத்து, இரவே பற்றிக்கொண்டது.

வி.சி.க. ஆதரவாளர்கள் என்ன செய்வதென்று திகைத்துப்போவதும் பதிலுக்குத் திட்டுவதுமாக ஒரு தளம்பல் நிலையில் வெதும்பியபடி கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.

அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, “ அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம் ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்! ” என்று மென்மையாகவும் எச்சரிக்கையாகவும் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அப்படி என்னதான் எழுதிவிட்டார், ஆ.இராசா?

”முன் ஏற தரப்பட்ட ’ஏணி’யும்

மூட சாதியை நொறுக்க வேண்டிய ’சிறுத்தை’யும்

வெறும் ’விசில்’ சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனைப் புறந்தள்ளி

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!

பெரியாரின்

’காலதேச வர்த்தமான’த்திற்கு

காத்திருப்போம்; என்றாலும்

களமாடுவோம்!

வெற்றி நமக்கே!!” என்பது இராசாவின் நள்ளிரவுப் பதிவு.

முதலில் எக்ஸ் பக்கத்தில் பதிந்த இக்கருத்தை பின்னர் தன் முகநூல் பக்கத்திலும் அவர் வெளியிட்டிருந்தார்.

பல்வேறு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், தி.மு.க.வுக்கே இது பிரச்னையாக மாறியது.

ஏற்கெனவே, ஆ.இராசா மட்டுமல்ல, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி முதலியோரும் இப்படி சமூகநீதிக்கு எதிராகவும், பெண்களையும் தலித்துகளையும் அவதூறு இழிவுசெய்யும்படியாகவும் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கின்றனர்.

தி.மு.க. தரப்பில் இன்று முற்பகல்வரை முறைப்படி இராசாவின் கருத்தை யாரும் கண்டிக்காமலோ கருத்துக்கூறாமலோ இருந்தநிலையில், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியிலும், விஜய் அமைச்சரவையில் வி.சி.க. சேர்ந்ததைப் பற்றிக் கேட்டதற்கு, ஏகவசனத்தில் பேசிவிட்டார்.

இந்த சூழலில், அமைச்சர்கள் பதவியேற்பு முடிவடைந்தபின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து கூறியதுடன், கட்சியினருக்கு பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது என அறிவுரையும் கூறினார்.

இதனிடையே, தன்னுடைய முதல் டுவீட்டை அழித்த இராசா, மீண்டும் ஒரு தாக்குதல் கருத்தைப் பதிவிட்டார்.

”என் வீட்டுத் தோட்டத்துத்

தென்னை

கூனி வளைந்து

எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்

அதற்குப் பெயர்

”முடத்தெங்கு”!

அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?

வாழ்க தமிழ்!” என்கிறது இராசாவின் இரண்டாம் பதிவு.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, இராசாவின் கருத்துக்குப் பதிலடியாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

”தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு...

பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று? ” என்று உ.வாசுகி சூடாகக் கேட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர், இந்த நேரத்தில் இப்படிப் பேசியிருப்பது அதன் ஆதரவு வட்டத்திலேயே கசப்பாகப் பார்க்கப்படுகிறது என்பதே உண்மை!

இதற்கிடையில் விசிக ஆதரவு டிவிட்டர் ஹேண்டில்களில் ஒன்று இப்படி பதிலடி கொடுத்துள்ளது:

ஏற்றிவிட்ட 'ஏணியை' எட்டி உதைத்து,

'சிறுத்தையின்' வியர்வையைச் சுரண்டித் தின்று,

கோட்டையில் அமர்ந்த பின் 'திமிர்' காட்டும் சுயநலக் கூட்டமே... கேளடா!

​வாக்கு வங்கிக்கு மட்டும் வளைத்துவிட்டு — அதிகாரப் பகிர்வு என்று வரும்போது அசிங்கமாய் வசைபாடும் உங்களின் 'இரட்டை நிலையை' நாடறியும்!

​பெரியாரின் 'சுயமரியாதை' மண்ணில், உரிமைக்காகக் களம் காண்பது 'புணர்ச்சி' அல்ல; அது 'அதிகாரப் புரட்சி'!

​கவிதை என்ற பெயரில் காம வெறியைக் கக்குபவர்களே... நீங்கள் காத்திருங்கள் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு,

சிறுத்தைகள் கோட்டைக்குள் சீறிப் பாய்வோம் 'அதிகாரப் பகிர்விற்கு'! ​வெல்வோம்! வீழ்த்துவோம்!

இந்த சமூக ஊடக மோதல் எதில் முடியும் என்று தெரியவில்லையே...