செய்திக் கட்டுரை

1978 முதல்... இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்!

Staff Writer

குஜராத்திலிருந்து பிரிட்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் இருந்த 242 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியான கோரமான பல விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நூற்றுக்கணக்கானவர்கள் அவற்றில் இறந்துபோயுள்ளனர்.

2020: கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் துயரமான ஒன்றாகப் பதிவாகியுள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளிலிருந்த இந்தியர்களைக் கூட்டிவந்த அந்த விமானம், துபாயிலிருந்து கிளம்பியது. கோழிக்கோடு விமானநிலையத்தில் இறங்கும் சமயத்தில் கனமழை பெய்தது. அதன் காரணமாக விமானிகளுக்கு ஓடுபாதை தெளிவாகத் தெரியவில்லை. அதனால் ஓடுபாதையையும் தாண்டிச் சென்றுவிட்ட விமானம் 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இரண்டு விமானிகள் உட்பட 21 பேர் அதில் உயிரிழந்தனர்.

2010 : மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து

கடந்த 2010ஆம் ஆண்டு மே 22 அன்று மங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ்-812 என்ற விமானம், பேரழிவு விபத்துக்கு உள்ளானது. போயிங் 737-800 வகை விமானமான அதுவும், துபாயிலிருந்து கிளம்பியதாகும். 166 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம் அதிகப்படியான வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சுமந்துகொண்டு வந்தது. கோழிக்கோட்டைப் போலவே டேபிள்டாப் வகை ஓடுதளம் உள்ள மங்களூரிலும் அந்த விமானத்தின் விமானிகள் ஓடுதளத்தில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக இறக்காமல் தள்ளிப்போனதால் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. விமானம் தீப்பிடித்து எரிந்தது. அதில் 158 பயணிகள் உயிரிழந்தனர். முன்பகுதியில் இருந்த 8 பேர் மட்டுமே உயிர்தப்பினார்கள்.

1998: அல்லயன்ஸ் ஏர் விமான விபத்து

அல்லயன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான 7412 என்ற விமானம் 1998 ஜூலை 17 அன்று பீகாரின் பாட்னா விமானநிலையத்தில் விபத்துக்கு உள்ளானது. போயிங் 737-2ஏ8 வகை விமானமான அது, தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கியது. ஆனால் அப்போது கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானநிலையத்துக்கு அருகில் இருக்கும் அப்பகுதியில் விழுந்துநொறுங்கிய விமானத்தில் இருந்த பயணிகளும் ஊழியர்களுமாக 55 பேரும் குடியிருப்புப் பகுதியில் இருந்த ஐந்து பேரும் இறந்துபோனார்கள்.

1996 : சர்க்கி தாத்ரி நடுவான விமான விபத்து

அரியானாவின் சர்க்கி தாத்ரி பகுதியில் 1996ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வான் வெளியில் நிகழ்ந்த விமான விபத்து, மிகவும் கோரமான சம்பவம் ஆகும். ஒரு விமானம் விழுந்து சேதமானாலே எவ்வளவு பெரிய இழப்பு! இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டால்... அப்படித்தான் அங்கு நிகழ்ந்தது.

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் 763 என்ற விமானமும் கஜக்ஸ்தான் ஏர்லைன்சின் 1907 என்ற விமானமும் தகவல்தொடர்பு கிடைக்காமல், திசைவிலகிச் சென்றதாலும் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இரண்டு விமானங்களிலும் ஊழியர், பயணிகள் அனைவருமாக மொத்தம் 349 பேர் அந்தக் கோர விபத்தில் பலியானார்கள். பல ஆண்டுகளாக இந்த உலகமே மறக்கமுடியாத ஒரு கொடூரமான நிகழ்வாக அது இருந்தது!

1993 : ஔரங்காபாத் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து

மகராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதியன்று, இந்தியன் ஏர்லைன்ஸ் 491 என்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானம் மட்டுமல்ல வேறு வாகனங்களும் விமான விபத்துக்குக் காரணமாக வாய்ப்பு உண்டு என்பதை நிரூபித்த சம்பவங்களில் அதுவும் ஒன்று.

போயிங் 737-2ஏ8 வகையைச் சேர்ந்த அந்த விமானம், அங்கிருந்து புறப்பட்டபோது ஓடுபாதையில் ஒரு டிரக் குறுக்கே நுழைந்துவிட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், கடைசி நேரத்தில் மோதுவதைத் தவிர்க்க எதுவும் செய்யமுடியவில்லை. பயங்கரமாக டிரக்கின் மீது விமானம் மோதியது. அதில், பயணம்செய்த மொத்த 118 பேரில் 55 பேர் உயிரை இழந்தனர்.

1990 : பெங்களூர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1990 பிப்ரவரி 14 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 605 என்ற விமானம், நகரில் உள்ள எச்.ஏ.எல். விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது. ஏர்பஸ் ஏ320 வகையான அந்த விமானம், முன்கூட்டியே தரையிறங்கத் தொடங்கியதால் பிரச்னை உருவானது. சிறிது நேரத்தில் ஓடுபாதையில் இறங்கியதால் கடுமையான சேதமும் ஏற்பட்டது. மொத்தம் இருந்த 142 பயணிகள், ஊழியர்களில் 92 பேர் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது.

1988 : குஜராத் இந்தியன் ஏர்லைன்ஸ் விபத்து

இன்றைக்கு விபத்து நிகழ்ந்த அகமதாபாத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னரும் பெரும் விமான விபத்து நேர்ந்திருக்கிறது. 1988 அக்டோபர் 19இல் போயிங் 737 வகை விமானம் தரையிறங்கும்போது, வானிலை மோசமாக இருந்தது. விமானிகளுக்கு காட்சிகள் தெளிவாகத் தெரியாத நிலையில், தரையிறங்கும் இடத்தைக் கண்டறிவது சிரமமாக மாறியது. அதில் பயணம்செய்த ஊழியர்கள், விமானிகள் என மொத்தம் 135 பேரில் இரண்டே இரண்டு பேர் மட்டும் உயிர்தப்பினர். மற்ற அனைவருமே இறந்துபோனது பெரும் துயரம்!

1978 : மும்பை ஏர் இந்தியா விபத்து

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் 1978 ஜனவரி புத்தாண்டு பிறந்த நாளில் ஏர் இந்தியா 855 விமானம் விபத்துக்கு உள்ளானது. மொத்தம் 213 பேர் அதில் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. முன்னதாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை ஊழியர்கள் அறிந்தனர். ஆனால் அதற்குள் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட, யோசித்து முடிப்பதற்குள் அந்த விமானம் அரபிக் கடலுக்குள் விழுந்தது. ஒருவர்கூட அதில் உயிர்தப்பவில்லை.