செய்திக் கட்டுரை

61 பேர் பலி- இந்தியா 4.5 டன் உணவுப்பொருள் உதவி..இலங்கையில் என்ன நடந்தது?

Staff Writer

இலங்கையில் டித்வா புயல் காரணமாக சில நாள்களாக அந்த நாடு முழுவதையும் புயல் மழை புரட்டிப்போட்டுவிட்டது. குறிப்பாக, தென் பகுதியில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொத்துக்கொத்தாக மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

மலையகத் தமிழர் பகுதிகள், ஈழத்தமிழரின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இந்த மழையால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

கடுமையான வானிலையால் நாடளவில் அண்மையாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 25 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

1867 முதல் இப்படி இருந்ததில்லை!

இலங்கையில் 1867ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு துறை தனியாகத் தொடங்கப்பட்டு அறிவியல் முறைப்படி கணிக்கப்பட்டுவருகிறது. அப்போதிருந்து இன்றுவரை இந்த டித்வா புயலின் பாதையைப் போல நகர்வுப் பாதை இருந்ததே இல்லை எனக் கூறும் அளவுக்கு, முழுவதுமாக ஈழத்தமிழர் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணம் வழியாக, நிலப்பகுதியாகவே கடக்கும்படியாக புயல் பாதை அமைந்திருக்கிறது. இலங்கை வளிமண்டலவியல் துறையினர் இதை வியப்புடன் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 16ஆம் தேதி முதல் இலங்கையில் புயல் சின்னம் காரணமாக, வானிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டன. பத்து நாள்கள் கடந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 877 குடும்பங்களைச் சேர்ந்த 3, 058 பேர் பாதிக்கப்பட்டனர் என்று இலங்கை வளிமண்டலவியல் துறை தெரிவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மாகாணங்கள், மாவட்டங்கள் எனும் அளவில் அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு சுற்றுவட்டாரத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தின் குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகள், வயல் வெளிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பிரதேசங்களில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து வீழ்ந்தன.

வவுனியாவில் உள்ள பிரதேச மருத்துவமனையில் வெள்ள நீர் தேங்கியதால், மருத்துவமனை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அவசரச் சிகிச்சை மட்டும் வழங்கப்படுகிறது என சுகாதார சேவைத் துறை தெரிவித்துள்ளது.

படகுகள் மூலம் விவசாயிகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று, கொக்குதொடுவாய் ஆகிய பிரதேசங்களில் நெல் வயல்களுக்கு இரவு கண்காணிப்புக்காக விவசாயிகள் வயல்களில் தங்கியிருந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் விவசாயிகள் மூலம் அங்குள்ள சமூகசேவை மைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் 2,679 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் 47 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன என்று அந்த மாவட்ட பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சாலைகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கிறது. அத்துடன் அடித்துவரப்படும் ஆற்று வாழை தாவரங்கள் பாலப்பகுதியில் தேங்கி, நீரோட்டத்தையும் வாகனப் போக்குவரத்தையும் முடக்கிப்போட்டது.

ஒரே குடும்பத்தில் 5 பேர்!

பதுளை மாவட்டத்தில் அடைமழை, மண்சரிவு காரணமாக கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 31 பேர் இறந்துபோயிள்ளனர். மடுல்சீமை- பட்டாவத்த மலைத்தோட்டத்தில் ஒரு வீட்டின் மீது மண் சரிந்ததில் மூன்று வயது சிறுவன், கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

தெதுறு ஓயா ஆறு பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மகவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடு ஒன்றில் மூன்று பேர் சிக்கித் தவித்தனர். அவர்களை இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

12,313 குடும்பங்கள்!

கடந்த 12 நாள்களாகத் தொடர்ந்து நீடித்துவரும் கனமழை, வெள்ளத்தால் இலங்கை முழுவதும் 12 ஆயிரத்து 313 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. மொத்தம் 43 ஆயிரத்து 991 தனி நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் பேரிடர் மேலாண்மை மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலில் இருப்பாக வைக்கப்பட்டிருந்த 4.5 டன் உணவுப்பொருள்கள் அந்நாட்டு புயல் பாதிப்புக்கான உதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கப்பல் மூலம் குடில்கள் அமைக்கப் பயன்படுத்தும் பொருட்கள், மின்சார விளக்குகள், சார்ஜிங் வயர்கள் உட்பட மற்ற பொருட்களும் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.

புயல் உதவியாக வழங்கப்பட்டுள்ள இப்பொருட்களை விக்ராந்த் கப்பலிலிருந்து இறக்கி, சரக்கு வாகனங்கள் மூலம் நிவாரண மையங்களுக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.