செய்திக் கட்டுரை

எம்.எல்.ஏ. சீட் தரப்படாதவர்களுக்கு தி.மு.க.வில் தேர்தல் பதவி!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைமை தேர்தலையொட்டிய பதவியை வழங்கி ஆறுதல்படுத்தியுள்ளது. 

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பலரையும் சோர்வடைந்து ஒதுங்கிவிடாமல் அந்தப் பதவியில் நியமித்து தேர்தல் பணியிலும் ஈடுபடுத்த வைத்திருக்கிறது, தி.மு.க. தலைமை.

சென்னை, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பரந்தாமனுக்கு சீட் மறுக்கப்பட்டு, தமிழன் பிரசன்னா அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய தொகுதிகளுக்கு பார்வையாளராக நியமித்துள்ளனர்.

இவரைப்போல, ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரகுமார், கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளுக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் அணியின் முன்னணிப் பொறுப்பாளரும் தூத்துக்குடியில் சீட் கிடைக்கும் எனக் கூறப்பட்டவருமான ம.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜோயலுக்கு எதிர்பார்ப்பு நடக்கவில்லை. அவர் சென்னை, தியாகராயர் நகர் தொகுதியின் பார்வையாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுபா. சந்திரசேகர் சென்னை ஆர்.கே. நகருக்கும்,

க.பிரபு சங்ககிரிக்கும்,

சி. ஆனந்தகுமார் ஆற்காட்டுக்கும்,

ஜி.எம். மதியழகன் தென்காசிக்கும்,

பேச்சிபாண்டியன் நெல்லைக்கும்,

பேச்சாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி சென்னை ஆயிரம்விளக்குக்கும்,

கே.இ.பிரகாஷ் கிருஷ்ணராயபுரத்துக்கும்,

ஜி.பி.ராஜா கிணத்துக்கடவுக்கும்,

மதுரை பாலா கோவை தெற்கு தொகுதிக்கும்,

இன்பா இரகு உடுமலைப்பேட்டைக்கும்,

நா. இளையராஜா வேப்பனஹள்ளிக்கும்,

ப.அப்துல்மாலிக் ஓட்டப்பிடாரத்துக்கும்,

சைதாப்பேட்டைக்கு சைதை சாதிக்கும் பார்வையாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பல ஊர்களில் சீட் கிடைக்காத அதிருப்தியில் கட்சிப் பதவியிலிருந்து விலகுவதும் தொடர்ந்துவருகிறது. திருப்பத்தூர் மாவட்ட குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளரும் மாதனூர் ஒன்றியப் பெருந்தலைவருமான சுரேஷ்குமார் தன் கட்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தான் போட்டியிட விருப்பமாக இருந்ததாகவும் அமைச்சர் எ.வ.வேலு அதைத் தடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போல, தலைநகரில் தியாகராயர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ. கருணாநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல், அவரின் மறைந்த அண்ணன் ஜெ. அன்பழகனின் மகன் இராஜா அன்பழகனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கருணாநிதி தன்னுடைய தொகுதிச் செயலாளர் பதவியை உதறியுள்ளார். அவருக்குப் பதிலாக சூட்டோடு சூடாக புதிய பொறுப்பாளரையும் நியமித்துள்ளது.

மறைந்த அன்பழகன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் மிகவும் உரிமையோடு பேசக்கூடிய சிலரில் ஒருவராக இருந்தார் என்பதும் பதிலுக்கு ஸ்டாலினும் அன்பழகன் இறக்கும் தறுவாயில் அவருடைய உடல்நலம், சிகிச்சை குறித்து தீவிர அக்கறை செலுத்தி வந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.