டாக்டர் நிராலி 
செய்திக் கட்டுரை

காற்றோடு காற்றான நிராலி... கனடாவில் தவிக்கும் 1 வயது குழந்தை- விமான விபத்து சோகம்!

Staff Writer

உலகையே உலுக்கி எடுத்துவிட்ட குஜராத் விமான விபத்தில் அந்த மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா நாட்டு பல் மருத்துவரும் உயிரிழந்தார்.

நிராலி சுரேஷ்குமார் பட்டேல் எனும் அவருக்கு வயது 32. மிஸ்சிசாகா எனும் ஊரில் பல் மருத்துவராகப் பணியாற்றிவந்த நிராலிக்கு, ஒரு வயதுக் குழந்தையும் கணவரும் உள்ளனர்.

நான்கைந்து நாள்கள் சொந்த நாட்டுப் பயணத்துக்குப் பின்னர், அவர் கனடாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பயணமே அவருடைய இறுதிப் பயணமாக அமைந்துவிட்டது, துயரம்!

கனடா நேரத்தின்படி, விடிகாலைப் பொழுதில் நிராலியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அந்நாட்டின் கனடிய சிபிசி ஊடகம் இச்செய்தியை உறுதிப்படுத்தியது.

நிராலி பட்டேலின் கணவரை ஊடகங்கள் தொடர்புகொண்டபோது, அவரால் பேசவே முடியவில்லை. ஆம், அவள் என் மனைவி இறந்துபோய்விட்டாள்; என்னால் இதற்குமேல் பேச முடியவில்லை என மனம் உடைந்த நிலையில் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாமல் பேச்சை நிறுத்திக்கொண்டுள்ளார்.

கனடாவில் கணிசமாக வசித்துவரும் குஜராத்தியர்களிடையே இந்தத் தகவல் பெரும் சோகத்தை உருவாக்கியது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நிராலியின் உறவினர்கள், அவருடைய குடும்பத்தினரைத் தொடர்புகொண்டனர்.

நிராலியின் சகோதரர், அவர்களின் பெற்றோர் பிராம்ப்டன் பகுதியில் வசித்துவருகின்றனர்.

நிராலியின் கணவர், குழந்தையுடன், அவரின் சகோதரர், பெற்றோரையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

நிராலி வசித்துவரும் ஒண்டாரியோ மாநிலத்தின் முதலமைச்சர் டக் ஃபோர்டு தகவல் அறிந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.

பூர்வீக மண்ணைப் பார்த்துவிட்டு புகுந்த மண்ணை நோக்கிப் பயணப்பட்டவருக்கு பொசுக்கென வாழ்க்கையே முடிந்துபோகும் பயணமாக இது இருந்துவிடும் என நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்!

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் பல் மருத்துவம் பட்டப்படிப்பை முடித்த நிராலி, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கனடாவில் மருத்துவர் தொழில் செய்வதற்கான உரிமத்தைப் பெற்றார். ஒண்டாரியோ மாநிலத்தின் மிஸ்சிசாகா பகுதியில் சிகிச்சை அளித்துவந்த அவருக்கு, ஏதாவது சிகிச்சை அளிப்பதற்குகூட இயலாதபடி வானவேடிக்கையைப் போல அரை நிமிடத்தில் எல்லாமும் முடிந்துபோனது.

கனடா பிரதமர் மார்க் கானி, நிராலியின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய குடும்பத்தார், குஜராத்துக்கு வருவதற்கு வசதிகளைச் செய்துதர நடவடிக்கை எடுத்துள்ளார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் சொந்த நாட்டுக்கு மறக்காமல் வந்து போகநினைக்கும் நிராலிகளுக்கு, இப்படியொரு இறப்பு நேர்ந்திருப்பது கண நேரம் சிந்தித்துப் பார்த்தால் மனம் நோகிறது.

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram