துரை. ரவிக்குமார் எம்.பி. 
செய்திக் கட்டுரை

பழைய நீதிக்கட்சி மனநிலை... திராவிட மாடல் அரசு மீது அவுட்லுக் இதழில் ரவிக்குமார் விமர்சனம்

தா.பிரகாஷ்

திமுக அரசு தலித்துகளின் சரியான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றத் தயங்குவதாக விசிக பொதுச்செயலர் ரவிக்குமார் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணிக்கு பிறகு, 2017ஆம் ஆண்டிலிருந்து திமுக கூட்டணியில் இருந்து வருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக இரண்டு மக்களவைத் தொகுதிகளை கேட்டுப்பெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர் திருமாவளவனும், ரவிக்குமாரும்.

இப்படி, 8 வருடமாக ஒரே (திமுக) கூட்டணியில் விசிக இடம்பெற்றிருந்தாலும், தலித்துகள் திராவிட மாடலிலிருந்து விலக்கப்படுவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய அவுட் லுக் கட்டுரை

பிரபல ஆங்கில வார இதழான ‘அவுட் லுக்’ திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக ‘திராவிட’ என்ற தலைப்பில் இந்த வார இதழை கொண்டு வந்துள்ளது. அதில் பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் நீதிக்கட்சி மற்று திராவிட இயக்கம் குறித்து எழுதியுள்ளனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமார் “சாதி, அரசியல் மற்றும் அதிகாரம்: திராவிட மாடலில் ஆதி திராவிடர்கள்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நீதிக்கட்சி தொடங்கி இன்றைய திமுக ஆட்சி வரையிலும் தலித்துகளின் பிரச்னைகள், அவர்களின் கோரிக்கைகள் அவர்கள் அணுகப்பட்ட விதம் குறித்து எழுதியிருப்பதோடு, திராவிட இயக்கத்தால் அரசியல் அதிகாரம் பெற்ற இடைசாதிகளின் சாதி பெரும்பான்மைவாதம் எப்படி தலித்துகள் மீதான வன்முறைக்கு காரணமாக அமைந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கட்டுரையின் கடைசியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்துள்ளார்.

அதில், தற்போது, தலித்துகளுக்கு எதிரான புதுவித வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அரங்கேறத்தொடங்கி உள்ளன.

வேங்கை வயலில் தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது(2022). நாங்குநேரியில், அதிக மதிப்பெண்கள் எடுத்தற்காக தலித் மாணவன் சக சாதி இந்து மாணவர்களால் தாக்கப்பட்டார்(2023). இன்றும் கூட, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களில் வழிபட தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.” என்று கூறியுள்ளவர், ”திராவிட மாடலில் இருந்து தலித்துகள் விலக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. தலித்துகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிப்பதில் கூட தற்போதைய திமுக அரசு தயக்கம் காட்டுகிறது.

பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு, ஆணவக் கொலை தடுப்பு சட்டம் போன்ற கோரிக்கைகளை தலித்துகள் முன்வைக்கும் போதெல்லாம் அரசு ஆணையம் அமைத்து, இந்த கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிக்கட்சி அரசாங்கத்திடம் பறையர், பஞ்சமர் ஆகிய சொற்களை தடை செய்து தங்களை திராவிடர் அல்லது ஆதிதிராவிடர் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது பதிவு செய்ய ஆணை பிறப்பிக்குமாறு தலித்துகள் கேட்டபோது, மிகவும் தயக்கத்துக்குப் பிறகே நீதிக்கட்சி அதை ஏற்றுக்கொண்டது. அவர்கள் தலித்துகளை ஆதிதிராவிடர் என அழைக்க விரும்பவில்லை. அந்த தயக்கம் இன்னும் தொடர்கிறது. அதனால்தான் ஆதிதிராவிடர் அரசாணை வெளியிட்ட 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசு ஆவணங்கள் பறையர் என்ற இழிவான சொல்லையே பயன்படுத்துகின்றன. இது திராவிட இயக்கத்தில் பொதிந்துள்ள ஆழமான மனப்பாங்கைப் பிரதிபலிக்கிறது.

- இவ்வாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram