தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளில் முக்கால்வாசி புரிந்துணர்வு ஒப்பந்தம்- எம்.ஓ.யூ. அளவுக்குதான் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டின் இன்றைய சென்னைப் பதிப்பில், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து அவர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார் என வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பு ஆட்சியின் தொழில்துறைச் செயல்பாடுகள் பற்றி புள்ளிவிவரங்களுடன் குறைகூறியுள்ளார்.
தென்னிந்தியத் தொழில்துறையின் இதயத்துடிப்பாக தமிழ்நாடு இருந்துவருவதாகவும் ஆட்டோமொபைல் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள்வரை நெசவுத்துறை முதல் பெட்ரோகெமிக்கல் துறைவரை, நம்முடைய மாநிலம் தொழில்முனைவு, புதுமை, பொருளாதார ஏதுநிலை என அடையாளச் சின்னமாக விளங்குகிறது என்றும் பழனிசாமி பாராட்டியுள்ளார்.
முந்தைய ஆட்சியில் பொருளாதாரத்தை வழிநடத்திய தனக்கு, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்த 6.64 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கும் நடப்புக்கும் ரொம்பவும் இடைவெளி இருப்பதைப் பார்த்து மனம் கஷ்டப்படுகிறது என பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
”ரிசர்வ் வங்கி, தொழில்துறை, முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் கடந்த 2023-24 கடைசி காலாண்டு அறிக்கையின்படி, இந்தத் தொகையில் கால்பகுதிக்கும் சற்று கூடுதல்தான் உண்மையில் செயலாக்கத்துக்கு வந்துள்ளது. மீதமெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவிப்பு நிலையில்தான் உள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதாரத் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய செயல்திட்டங்கள் எல்லாம் தொடக்கத்திலேயே உள்ளன.” என்றும் பழனிசாமி குறைபட்டுக்கொண்டுள்ளார்.
எடுத்துக்காட்டாக, கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், ஆசிய வளர்ச்சி வங்கியின் 3,500 கோடி ரூபாய் கடன் உதவி கிடைத்தும்கூட இந்தத் திட்டம் மந்தகதியில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதைப் போலவே, இந்தியாவின் தகவல் நுட்பத் தலைநகரான பெங்களூருடன் வடதமிழ்நாட்டை இணைக்கும் சென்னை- பெங்களூர் தொழில் வழித்தடம் திட்டமும்... அதற்காக தனி இயக்கமும் உருவாக்கப்பட்டது. மாஸ்டர் பிளான் எல்லாம் முடிந்தபின்னரும் அடிப்படை நிதித் தேவைகூட வந்துசேரவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
குஜராத்தின் டொலரா, மகாராஷ்டிரத்தின் ஔரங்காபாத் தொழில்வழித்தடங்களைப் போல தமிழ்நாட்டில் கோவை- சேலம்- சென்னை உயர்நுட்ப தொழில்வழித் தடத்தை உருவாக்குவது, அடுத்த தலைமுறை உற்பத்திக்கான பெரும் நுழைவாயிலாக இருக்கும். தற்போதைய நிலையில் கிருஷ்ணகிரி சிப்காட் முறையாகப் பயன்படுத்தப்படவே இல்லை என்பதும் பழனிசாமியின் குற்றச்சாட்டு ஆகும்.
சென்னை, ஒசூர், சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள தமிழ்நாட்டு இராணுவத் தொழில்வழித்தடத்துக்கு 11,794 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன; அதில் 3,861 கோடி ரூபாய்க்குதான் அதாவது 33சதவீதத்துக்குதான் செயலாக்கம் ஆகியுள்ளது என்றும் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது வெறும் தொழில்ரீதியானவை மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடையதும் ஆகும் என்றும் இந்தத் தொழில் வழித்தடங்களை அமைத்திருந்தால் 4 இலட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை அளித்திருக்க முடியும் என்றும் அவர் ஒரு கணக்கு சொல்கிறார்.
கூடவே, அ.தி.மு.க.வின் சார்பில் மூன்று ஆலோசனைகளையும் அளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவும் அவர் விவரங்களைக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சென்னையை மையப்படுத்தியதான திட்டங்களையே உருவாக்கக்கூடாது என்றும் 25 மாவட்டங்களை மையமாகக் கொண்ட தொழில்மையங்களை உருவாக்கவேண்டும் என்றும் பரிந்துரை அளித்துள்ளார், பழனிசாமி.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி தி.மு.க. அரசாங்கம் செயல்படாததால் நம்முடைய தொழில்துறை எந்திரம் சீர்குலைந்துவிட்டது என்பதே அவரின் மையமான குற்றச்சாட்டு!
வழக்கமாக, எடப்பாடி பழனிசாமியின் அன்றாட அறிக்கைக்கெல்லாம் மாறிமாறி பதில்கூறும் அமைச்சர்கள் குறிப்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, தன் துறையைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவரின் சூடான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.