நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா படகில் சென்று உதவி  
செய்திக் கட்டுரை

மீட்பு விமானம் ஆற்றில் விழுந்து, விமானி பலி- ஈழத்தமிழர் பகுதிகள் பாதிப்பு! (தொகுப்பு)

Staff Writer
பலியான இலங்கை விமானப் படை விமானி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கச் சென்ற இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விபத்துக்கு உள்ளானது. புத்தளம், வென்னப்புவ, லுனுவில எனும் இடத்துக்கு அந்த பெல் 212 இரக ஹெலிகாப்டர் சென்றபோது, ஞாயிறு மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் விமானி விங் கமாண்டர் நிலை அதிகாரி நிர்மல் சியாம் பலாப்பிட்டியா உட்பட 5 பேர் இருந்தனர். வெள்ளம் பாய்ந்தோடிய ஜின் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. முன்னதாக, ஆற்றை ஒட்டிய சாலைக்கு அருகில் ஹெலிகாப்டரைத் தரையிறக்க முயன்றபோது அது தோல்வியில் முடிந்தது. அவர்களில் விமானி உயிரிழந்தார். உடன்சென்ற மற்ற 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

5 கடற்படையினர் பலி

யாழ்ப்பாணம், சுண்டிக்குளி-களப்பு பகுதியில் முகத்துவாரத்தைச் சீரமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களில் ஐந்து பேர் திடீரென மாயமானார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க கடற்படையினர் தேடுதலில் இறங்கினர். காணாமல்போன ஐவரும் சடலங்களாகவே கிடைத்தனர்.

படகில் எதிர்க்கட்சித் தலைவர்

கொலன்னாவை பகுதியில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்த்தார். அப்போது அந்த மக்கள் படகு வேண்டும் எனக் கேட்டனர். அதன்படி இரண்டு படகுகளை அப்பகுதிக்குக் கிடைக்கும்படி அவர் செய்தார். மேலும், அவரே ஒரு படகில் நேற்று அங்கு சென்று சமைத்த உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் வழங்கினார்.

மன்னாரில் தவித்த தமிழர்கள் மீட்பு

தனியாக விடப்பட்ட 250 பேர்

ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் உள்ள வடக்கு மாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் கட்டை அடம்பன், இசைமழை தாழ்வு, முருங்கன் ஆகிய கிராமங்கள் வெள்ள நீரால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இசைமழைதாழ்வு கிராமம் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டது. அவசரத் தேவையுள்ள மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்க மாவட்ட கூடுதல் அரச அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.

மன்னார்- யாழ் ஏ32 வீதி, மன்னார்- மதவாச்சி முதன்மை வீதி ஆகிய இரண்டிலும் வெள்ளநீர் தேங்கியிருப்பதால், மற்ற மாவட்டங்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மல்வத்து ஆறு, பாலியாறு, பறங்கியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், மன்னார் மாவட்டத்தின் குளங்களில் நீர் பெருகியுள்ளது.

குஞ்சுக்குளம் தேக்கம் தொங்குபாலம் பகுதியில் இரண்டு நாள்களாகத் தவித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கூராய் பகுதியில் குளம் பெருக்கெடுத்ததால் அந்தப் பகுதியில் 40 பேருக்கும் மேல் மரங்களிலும் உயர்ந்த கட்டடங்களிலும் தஞ்சம் அடைந்தனர். நீர்மட்டம் குறைந்ததையடுத்து அங்குள்ள மண் திட்டில் வந்து தங்கியுள்ளனர். இவ்வாறு தனியாக விடப்பட்ட 250க்கும் மேற்பட்டோரை மீட்கும்பணி மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.

இந்த மழை வெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தில் 24,313 குடும்பங்களைச் சேர்ந்த 79,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,230 குடும்பங்களைச் சேர்ந்த 35,505 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நானாட்டான், மடு. மாந்தை மேற்கு ஆகிய பிரதேசங்களில் ஆடு, மாடு உட்பட்ட கால்நடைகள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

பிரபாகரன் ஊரில் படகுகள் சேதம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வல்வெட்டித்துறையில் புயலால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல படகுகள் பாறைகளில் மோதி சேதம் அடைந்துள்ளன. வலைகள் உட்பட மீன்பிடி சாதனங்களும் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன. காணாமல்போன படகுகள், சாதனங்களை மீட்பதில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், பலாலி ஆகிய இடங்களில் காவல்நிலையங்களில் வெள்ள நீர் புகுந்தது. படகு மூலமே அவர்கள் பணியைக் கவனிக்க முடிகிறது.

டித்வா புயல் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெரும் உயிர்ச்சேதங்கள் இல்லாதபோதும் கணிசமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 14,624 குடும்பங்களைச் சேர்ந்த 46,638 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 இடைத்தங்கல் முகாம்களில் 5 ஆயிரத்து 323 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேசங்களைச் சேர்ந்த 212 கிராமங்களில், 60,458 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இங்கு மாவிலாறு அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டதால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. அதிகமான இடங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் மோசமான பாதிப்பை திருகோணமலை எதிர்கொண்டுள்ளது. திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், மொறவெவ, சேருவில, வெருகல், மூதூர், கிண்ணியா, கோமரங்கடவலவு, பதவிசிறிபுர, குச்சவெளி, கந்தளாய் ஆகிய பகுதிகளில் கணிசமான பாதிப்பு பதிவாகியுள்ளது.

காரைதீவுக்குள் கடல்நீர்

அம்பாறை மாவட்டத்தில் கரையோரம் உள்ள காரைதீவு கிராமத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. குளவெளி, கண்ணகி கிராமம் ஆகியவை கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன.

50 குடும்பங்கள் புதைந்துபோனார்களா?

தெற்கில் கண்டி- மாத்தளை சாலையில் உள்ள அலவத்துகொடையின் ரம்புக்கெல பிரதேசத்தில் ஞாயிறு அதிகாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கும்புர- அலவத்துகொடை சாலையில் ஏற்பட்ட பேரிடரால், கிராமத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. 50 குடும்பங்களைச் சேர்ந்த இந்த கிராமமே மண்ணுக்குள் மூடிப்போய்விட்டது. இந்தக் கோர சம்பவத்தில் இறந்துபோன 10 பேரின் உடல்கள் இன்றுகாலைவரை மீட்கப்பட்டுள்ளன.

11 மாவட்டங்களில் நிலச்சரிவு

வெள்ளநீர் வடியத் தொடங்காத நிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதால், 11 மாவட்டங்களில் 93 பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கம்பகா, கொழும்பு ஆகிய மாவட்டங்கள் இடதில் அடக்கம். களுத்துறை, காலி, மொனராகலை, அம்பாந்த்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முதலாம், இரண்டாம் நிலை எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 20 பிரதேசங்களில் 103 பேர் மரணம் அடைந்துள்ளனர். 180 பேர்வரை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 11,129 குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 821 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,500 பேர் இடப்பெயர்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.