புதிய முறைகளைக் கையாளும் மீனவ கிராமப் பெண்கள் 
செய்திக் கட்டுரை

மீன்வளத் தொழிலில் அசத்தும் பெண்கள்!

அக்சரா சனல்

உலகில் ஆண்கள் ஆதிக்கம் இல்லாத துறையோ, தொழிலோ இல்லை என்பது தெரிந்ததே. மீன்வளத் தொழில் மட்டும் என்ன விதிவிலக்காகவா இருக்கப்போகிறது?

இந்நிலையில்தான் மீன் விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் அதிகப்படியான பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கென தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கு காரணம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மீன் வரத்து குறைவு, பெருவிசைப்படகுகளின் அதிகப்படியான மீன்பிடி மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் இல்லாமையே ஆகும்.

இதை கருத்தில் கொண்டு, ‘வெற்றிப்பாவை’ என்ற மீனவ உற்பத்தியாளர் நிறுவனம், டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) வழங்கும் பயிற்சிகளின் மூலம், மீன் மற்றும் கடல்சார் பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரிப்பது, அவற்றைச் சந்தைப்படுத்துவது, மற்றும் சுய தொழில்முனைவு மேற்கொள்வது போன்ற துறைகளில் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர் பெண்கள்.

இந்த முன்னெடுப்பு, பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குகிறது.

மீன்பிடித் தொழிலில் உள்ள சவால்கள்

ஷர்மிளா, காவிரி டெல்டா பகுதியில் கடலோரம் உள்ள வாணகிரி என்ற கிராமத்தைச் சார்ந்த மீனவப்பெண். அவரின் தலைமையில் அந்த பகுதி பெண்கள் ஒருங்கிணைந்து ‘சமுத்ரா’ என்ற பெயரில் சிறு அலுவலகம் அமைத்து, கருவாடு, மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கூனிப்பொடி போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட கடல் சார் உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க பயிற்சி பெற்று, இப்பொழுது தொழில் சார்ந்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து ஷர்மிளா கூறுகையில்,“எங்கள் வாணகிரி கிராமத்தில் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் உள்ளார்கள். இதில் 500 பெண்கள் மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி எங்கள் சுற்றுவட்டார கிராமங்களிலும் கூட பெரும்பான்மையான பெண்கள் இத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நள்ளிரவு இரண்டு மணி அளவில் பயணம் செய்து, பூம்புகார், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற இடங்களில் இருந்து மீன்களை வாங்கிக் கொண்டு, கூட்டம் கூட்டமாக டெம்போ ட்ராவலர்களில் கூடைகளுடன் பயணித்து, அருகிலுள்ள ஊருக்குள் இறங்கி நடந்து சென்று விற்று வருகிறார்கள்.

“இது ஒரு சவாலான வேலை. இதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இவ்வளவு கடினமாக உழைத்தும் அவர்களுக்கான லாபத்தை அவர்கள் பெறுவதே இல்லை. இருந்தும் இந்த தொழிலை சார்ந்து தான் எங்கள் பெண்களின் பொருளாதாரம்அமைந்திருக்கிறது” என்று கூறுகிறார் ஷர்மிளா.

வாணகிரியைச் சேர்ந்த சத்தியவாணி (49), கடந்த 15 ஆண்டுகளாக மீன் ஏலம் விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். காலநிலை மாற்றம் காரணமாக மீன் வரத்து குறைந்ததால், இந்தத் தொழிலும் லாபகரமாக இல்லை என்கிறார் அவர். இதுபோன்ற சூழலில், பெண்களுக்குப் பொருளாதார விடுதலை அளிக்கும் நோக்கத்துடன், வெற்றிப்பாவை நிறுவனம் கைகொடுக்கிறது.

பெண்களுக்கு பொருளாதார விடுதலை தரும் ‘வெற்றிப்பாவை’

பூம்புகார், வாணகிரி,மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம் போன்ற கடலோர கிராமங்களில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து வெற்றிப்பாவை நிறுவனம் தொழில் முறை பயிற்சிகளை அளித்து வருகிறது. ஏறத்தாழ 150 பெண்களை தொழில் முனைவோராக்க இந்த அமைப்பு முயற்சித்து வருகிறது.

சோலார் டிரையர் பயன்படுத்தி கருவாடு பதப்படுத்தவும், மீன் இறால் ஊறுகாய் செய்வதற்கும் தொழில் முறை பயிற்சிகள் அளித்து வருகிறது. மீன் கழிவுகளைக் கொண்டு உரம் செய்யும் முறையும் அந்த பயிற்சியில் ஒரு அங்கமாக இருக்கிறது. பத்து நாள் நடைபெறும் பயிற்சியில், அவர்களுக்கு கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான செயலாக்கப் பயிற்சியும் மற்றும் சோலார் ட்ரையர் (Solar Dryer) பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துதல், மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரித்தல், மற்றும் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மேலும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

சோலார் ட்ரையரின் முக்கியத்துவம்

வாணகிரி என்னும் சிறு மீனவ கிராமத்தை சார்ந்த 52 வயதான சின்னபொண்ணு, “மீன்கள்தான் எங்கள் வாழ்வாதாரம். முன்னெல்லாம் மீன்களை கூடையில் எடுத்துச் சென்று ஊர் தெருக்களுக்குள் விற்று வருவேன். இப்பொழுது மீன் வரத்துகுறைந்துவிட்டதால் கருவாடு வியாபாரம் செய்து வருகிறேன். எங்களுக்கு இந்த தொழில் மட்டுமே தெரியும்.

என் கணவரும் மீனவர் தான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு காரணத்தினால்சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைநடந்தது. அதன் பின் அவர் தொழிலுக்கு செல்வதில்லை. எனக்கு சிலபொறுப்புகள் இருக்கின்றன, அதை நான் கடன் உதவிகளின் மூலமே நிறைவேற்றி வருகிறேன். எங்கள் தொழிலில் நிரந்தரமான பொருளாதார சூழல் நிலவுவதில்லை.இப்போது சில மாதங்களுக்கு முன்பு தான் ஷர்மிளாவின் மூலமாக வெற்றிப்பாவை மீன் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்தேன். அதன் வழியாக எங்களுக்கு தொழில்முறையில் சோலார் ட்ரையரை பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துவது மற்றும் மீன் ஊறுகாய் செய்வதை பற்றிய செயல்முறை வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னிடமும் இப்பொழுது ஒரு சோலார் டிரைவர் உள்ளது, அதை வைத்து தான் கருவாடு பதப்படுத்தி வருகிறோம்,”  என்று சொன்னார்.

அவர் மேலும் கூறியதாவது: “இதற்கு முன்பு வரை கடலோரங்களிலேயே கருவாடு பதப்படுத்துவதற்காக காய வைப்போம். காக்கை, நாய் போன்ற விலங்குகளினால் உற்பத்தி கெடும். அத்துடன் இந்த பாரம்பரிய முறைப்படி கருவாடு பதப்படுத்தும் பொழுது கருவாடு சுகாதாரமான முறையில் கையாளப்படுவதில்லை. இது எங்களின் உற்பத்தியின் லாபத்தை குறைக்கிறது. MSSRF மூலம் எனக்கு வழங்கப்பட்ட சோலார் டிரையரை பயன்படுத்தும்பொழுது மிக சுகாதாரமான முறையில் கருவாடு உற்பத்தி செய்யப்படுவதால், அந்த பொருளின் லாபம் பாரம்பரிய முறையில் செய்யப்படும் கருவாட்டை விட இரட்டிப்பாக கிடைக்கிறது. கருவாடு காய வைக்கும் தருணங்களில் எங்களால் வேற எந்த வேலையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இப்போது இந்த சோலார் ட்ரையர் உபயோகிப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கிறது. இது எங்கள் உற்பத்தியை கூட்டி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது,” என்கிறார்.

தேன் கலாவின் தொழில்முனைவு பயணம்

பூம்புகார் துறைமுகத்தில் விசைப்படகுகளில் பணி புரியும் மீனவ தொழிலாளர்களுக்காக ஒரு சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார் 39 வயதான தேன் கலா. எட்டாம் வகுப்பு வரையிலே பள்ளி படிப்பு பெற்றிருக்கும் அவர் இப்பொழுது வெற்றிப்பாவை குழுவின் மதிப்பு கூட்டும் பொருள்களின் உற்பத்தி செய்யும் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாறி இருக்கிறார். தான் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய கடல்சார் உணவுகளை முகநூல் வாயிலாக விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, பழுதுபட்ட அல்லது பழைய மீன் பிடி வலைகளை கொண்டு மிதியடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தேன் கலா கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வெற்றிப்பாவை போன்ற சில நிறுவனங்கள் எங்களுக்கு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் என்னைப் போன்ற என் கிராமத்து பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. என் கணவரும் என் குழந்தைகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்” என விவரிக்கிறார். “அம்மா உங்கள் தைரியத்தை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு” என்று தன் குழந்தைகள் கூறியதாக பகிர்ந்து கொள்கிறார். “இனி என் தேவைகளுக்காக நான் யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதே எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதியான எதிர்காலத்தை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்”.

புதிய எதிர்காலத்தை நோக்கும் மீனவப் பெண்கள்

டெல்லியில் நடைபெற்ற World Food India 2024 கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்த அனுபவத்தை ரேணுகா பகிர்ந்துகொள்கிறார். “எங்கள் கிராமங்களிலிருந்து பெண்கள் இவ்வளவு தொலைவு பயணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல. நாங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கும் பொருட்களை அனைவரும் விரும்புகிறார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்சி நிறுவனம் போன்ற அமைப்புகள் இவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் மிகவும் முக்கியமானவை. இவர்களைப் போன்ற கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் குழந்தைகளுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை கட்டமைப்பது மட்டுமின்றி இவர்களும் சுதந்திரமாக இயங்குவதற்கான தைரியத்தையும் அளிக்கின்றது.