இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50 சதவீத வரி உயர்த்தி அமெரிக்க அரசு அடாவடியில் இறங்கியதைத் தொடர்ந்து அதை எதிர்கொள்ள மத்திய அரசு புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தடாலடி முடிவால் தற்காலிகமாக மட்டும் இந்த முடிவை எடுக்காமல், நீண்ட கால நோக்கில் புதிய நிலையை எடுக்க அரசு யோசித்துவருகிறது.
கடந்த காலத்தில் இந்தியா இறக்குமதியில் குறிப்பிட்ட நாடுகளையே சார்ந்து இருந்துவந்ததால் பல சவால்களைச் சந்தித்துவந்தது; அதன் தொடர்ச்சியாக இப்போது ஏற்றுமதியில் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்; வர்த்தகச் சங்கிலியை ஓர் ஆயுதமாக சில நாடுகள் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய ஏற்றுமதிச் சந்தையை மாற்றியமைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கச் சந்தைகளில் சீனத்தின் பங்கு 21 சதவீதமாக இருந்தது. அதை இப்போது சீனம் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்குக் குறைத்திருக்கிறது. அதாவது, 12 சதவீதமாக அது குறைந்துள்ளது.
இந்தியாவுக்கு வேறு வழிகள் உள்ளன என்கிறார்கள், வர்த்தகவியல் வல்லுநர்கள்.
நம் நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஏழு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்தபடியே இருந்துவருகிறது. 2018ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியின் அளவு 16 சதவீதமாக இருந்தது. 2020இல் 17 சதவீதமாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இடையில் வந்த கொரோனாவையும் தாண்டி 18 சதவீதமாகவும் உயர்ந்தது.
கடந்த நிதியாண்டில் இரண்டு புள்ளிகள் கூடுதலாகி 20 சதவீதமாக அது அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில் 22 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதியானது பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்ததாக மாறிவிட்டது; இது உலக அளவிலான சந்தை மதிப்பில் 38 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த சூழலில், நம் இறக்குமதியை மாற்றியமைக்கும் உத்தியை புதிதாக வகுக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
சீன நாட்டிலிருந்து நம்முடைய இறக்குமதி இந்த ஏழு ஆண்டு காலப் பகுதியில், 2018இல் 16 சதவீதமாக இருந்தது 2020இல் 14 சதவீதமாகக் குறைந்தது. கொரோனாவை அடுத்து 2024இல் 15 சதவீதம், கடந்த ஆண்டில் 16 சதவீதம், நடப்பு ஆண்டில் 17 சதவீதமாக அதிகரித்துவருகிறது.
ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. உடனடியாக, ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தை இலக்காக அரசு தீர்மானித்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்த நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் என பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மொத்தம் 50 நாடுகளை இலக்குவைத்து நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.