ஹார்மூஸ் நீரிணை 
செய்திக் கட்டுரை

ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடினால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

தா.பிரகாஷ்

இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில் ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரை ஏதோ இருநாடுகளுக்கு இடையேயான மோதல் எனக் கடக்கிறோம். ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. உலக நாடுகள் அனைத்தும் ‘சந்தை’ என்னும் ஒரு புள்ளியில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால், எங்கு போர் நடந்தாலும் அது உலக நாடுகளை பாதிக்கும் என்பதுதான் எதார்த்தம்.

இப்படியான நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு நீரிணையை மூடுவதால் என்ன பாதிப்பு…?

நிச்சயம் கடுமையான பாதிப்பு உண்டு. இந்த நீரிணைக்கும் சர்வதேச எரிபொருள் சந்தைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மத்திய கிழக்கு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழிப்பதையாக உள்ளது ஹார்மூஸ் நீரிணை.

பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவை இணைக்கும் இந்த நீரிணை ஏறக்குறைய 33 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இந்த குறுகிய பாதையின் வழியாகத்தான் உலகின் இருபது சதவீத எண்ணெய் நுகர்வுக்கான வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகிலேயே இயற்கை எரி வாயு அதிகம் உற்பத்தி செய்யும் கத்தாரும் இந்த ஹார்மூஸ் நீரிணை வழியாகத்தான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவுக்கும் இந்த நீரிணை மிக முக்கியமானது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கில் உள்ள ஈராக், சவுதி, யூஏஇ, குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளிடம் இருந்தே இந்தியா கச்சா எண்ணையை வாங்குகிறது. கடந்த மே மாதம் இந்தியா இறக்குமதி செய்த 47 சதவீத கச்சா எண்ணெய், இந்த ஹார்மூஸ் நீரிணை வழியாகவே நம்முடைய துறைமுகங்களுக்கு வந்தது.

இந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியதுமே கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் உயர்ந்தது. நீடிக்கும் சண்டையால் பதற்றம் ஒருபக்கம் என்றால், ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரித்திருப்பது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஈரான் – ஈராக் இடையே நடந்த போரின் போதும், மத்திய கிழக்கில் பதற்றம் உருவாகும் போதெல்லாம் இந்த நீரிணையை மூடப்போவதாக ஈரான் அறிவித்திருந்தாலும், இதுவரை மூடியதில்லை. இதை மூடுவதென்றால் ரொம்ப சிரமப்படவேண்டாம். இரண்டு பழைய கப்பல்களை எரியவிட்டால் போதும் போக்குவரத்து நின்றுவிடும்.

ஆனால், இப்போது ஹார்மூஸ் நீரிணையை மூடுவதற்கான சூழல் இருப்பதால், இந்தியாவில் மேலும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்...

வாங்க பாஸ் வண்டி டேங்கை ஃபுல் பண்ணுவோம்!