ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர் சி 
செய்திக் கட்டுரை

ரஜினி படத்தில் இருந்து இதனால்தான் ஜூட் விட்டாரா சுந்தர்.சி?

மிஸ்டர் முள்

ரஜினி, கமல் படம் என்கிற மெகா ஜாக்பாட் கிடைத்தும் அதிலிருந்து ரோஷத்தோடு வெளியேறியதன் மூலம், காயசண்டிகையை விட அகோர பசியோடு அலையும், யூடியூபர்களுக்கு அறுசுவை விருந்தே படைத்திருக்கிறார் சுந்தர்.சி.

யெஸ். கடந்த நான்கு நாட்களாக சோஷியல் மீடியாக்களின் சூடான, ட்ரெண்டிங் டாபிக் சுந்தர்.சி. ரஜினி கமல் படத்தை விட்டு வெளியேறியதுதான். சும்மாவே ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி அந்த பெருமாளுக்கே உருமால் கட்டுகிற நம்ம ஆட்களுக்கு இவ்வளவு பெரிய பரபரப்பு கிடைத்தால் விட்டு வைப்பார்களா ?

‘குஷ்புதான் ஹீரோயின்னு சொல்லி சுந்தர் அடம்பிடிச்சாராம்’

‘அரண்மனை 5 தான் எடுப்பேன். நீங்க பேயாதான் நடிக்கணும்னு ரஜினி கிட்ட சொன்னாராம்’

‘அன்பே சிவம் சமயத்துல தலையீடுகளை மனசுல வச்சுக்கிட்டு கமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டாராம்’

என்று கதை கதைகேளு... சுந்தர்.சி கதை கேளு யூகங்கள் ஓடிக்கொண்டிருக்க, நடந்த பஞ்சாயத்துதான் என்ன என்று மும்முனைகளிலும் விசாரித்தபோது...

சுமார் மூன்று மாதங்களுக்கு மனைவி குஷ்புவின் ஏற்பாட்டில் போயஸ்கார்டன் போய் ரஜினிக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் சுந்தர். அந்தக் கதை ஆன் த ஸ்பாட்டில் ரஜினிக்கு ஓ.கே.

தயாரிப்பாளர் யார் என்பது குறித்த பேச்சு வார்த்தை வந்தபோது தம்பதியர் தங்களுக்கு மிகவும் நெருக்கமான இரு நிறுவனங்களை சிபாரிசு செய்து வேண்டுமானால் ரஜினி மகள்களையும் அதில் பார்ட்னர்களாக்கி விடுவதாக ரஜினியின் நாக்கில் தேன் தடவியிருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அது ரஜினிக்கு சரிப்பட்டு வரவில்லை.

‘போங்க நானே புரடியூசர் சொல்லி அனுப்புறேன்’ என்று அவர்களை வழியனுப்பிய ரஜினி அடுத்த ஒரே மாதத்தில் கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்குப் பண்ணலாம். எனக்கு ஒரு வாக்குறுதியைக் காப்பாத்துன மாதிரி ஆச்சி’ என்று ஆசுவாசமாகிறார்.

தம்பதியர்களுக்கு சற்று தர்மசங்கடம். கமலிடமே பல ராஜதந்திர தயாரிப்பு நிர்வாகிகள் இருப்பதால் குஷ்பு அந்த ஏரியாப் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியாது. ஆனாலும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.

ரஜினி, கமல், சுந்தர் இணைந்து புகைப்படம் எடுத்து மீடியாவுக்கு சேதி சொல்கிறார்கள். சிறிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன. படம் தொடர்பான டெக்னீஷியன்கள் அத்தனை பேரையும் கமல் நிர்வாகமே உள்ளே கொண்டுவரத் துவங்குகிறது.

எல்லாம் ஓ.கே. நம் சம்பளத்தைக் கூட கேட்காமல் வேலைகள் நடக்கின்றனவே என்று தயாரிப்பு நிர்வாகிகளை விசாரிக்கும்போதுதான், சுந்தர் தன் வாழ்நாளில் வாங்காத சம்பளம், கமல் அதை முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். இன்னும் இறங்கி விசாரிக்கும்போது அது 10 கோடி என்றும் தெரிய வருகிறது.

இதைக் கேட்டவுடன் கணவன் மனைவி இருவருமே படு அப்செட். நேற்று வந்த ஒன்றிரண்டு ஹிட் கொடுத்த டைரக்டர்களெல்லாம் 50 கோடி வாங்கும்போது எனக்கு வெறும் பத்துதானா என்று அப்செட் ஆனவர் அது குறித்து யாரிடம் பேசுவது என்று தெரியாமல் குழம்பித்தான் மனைவியின் இன்ஸ்டா பதிவு மூலம்,..எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன்.. என்று பகிர்ந்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்.

ரஜினி - கமல்

கம்பெனி சீக்ரெட்டை இப்படி பொது வெளியில் பட்டென்று உடைத்ததை ரஜினி, கமல் இருவருமே ரசிக்கவில்லை. மாத்துடா டைரக்டரை என்று முடிவெடுத்து அடுத்த இயக்குநர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ரேஸில் இப்போதைக்கு வெங்கட் பிரபு முன்னணியில் இருக்கிறார். சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போகும் படத்தை ஒரு ஆறு மாதம் தள்ளிப்போட்டு வந்தால் வெங்கட் பிரபுவே ரஜினி படத்தை இயக்குவார் என்பதுதான் இன்றைய நிலவரம்.