தி.மு.க.- மார்க்சிஸ்ட் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை  
செய்திக் கட்டுரை

உங்க தொகுதிகளையும்தான் தே.மு.தி.க.வுக்குத் தரணும்... தி.மு.க. தகவலால் அதிர்ந்த இடதுசாரிகள்!

இரா. தமிழ்க்கனல்

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த தேர்தலைவிடக் குறைவான தொகுதிகளே ஒதுக்க கூட்டணி தலைமை முன்வந்துள்ளது. இதை இரு இடதுசாரி கட்சிகளுமே ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொகுதிகளை இறுதிப்படுத்துவதில் இழுபறி நீடிக்கிறது.

கடந்த 2021 தேர்தலில் இதே கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா ஆறு தொகுதிகளில் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளுமே தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றன.

இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவும் தி.மு.க. குழுவும் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. ஆனால் தொகுதி எண்ணிக்கையை இறுதிப்படுத்துவதில் இழுபறி நீடிக்கிறது.

திருச்சி சிவா உட்பட்ட தி.மு.க. பேச்சுக் குழுவினர்

இதைப்போலவே, மார்க்சிஸ்ட் கட்சிக் குழுவும் இரண்டு முறை தி.மு.க. குழுவைச் சந்தித்தும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதியாகவில்லை. நேற்று தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றுவிட்டதாலும், அமைச்சர் நேரு திருச்சி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் காரணமாகவும் சி.பி.எம். கட்சிக் குழுவின் 2ஆவது பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.

திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், க.கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோரைக் கொண்ட குழுவினருடன் பேசினர்.

ஆனால், தி.மு.க. கூறிய எண்ணிக்கையைத் தங்களால் ஏற்கமுடியவில்லை எனத் தெரிவித்துவிட்டதாக சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார்.

உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.

பெ.சண்முகம் தலைமையிலான சி.பி.எம். குழுவினர்

சி.பி.எம். தரப்பில், முதலில் இரட்டை இலக்கம் எனக் கூறியவர்கள், பிறகு எட்டு இடங்கள் என இறங்கிவந்தனர். ஆனால் தி.மு.க.வோ அதை ஏற்கமுடியாது என நிராகரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நேற்றைய இரண்டாம் கட்டப் பேச்சின்போது தி.மு.க. தரப்பில், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் சேர்த்து 10 இடங்கள் எனத் தீர்மானித்திருக்கிறோம்; சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

போன தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிடக் குறைவான எண்ணிக்கையைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சி.பி.எம். குழு, அந்த இடத்திலேயே திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியபடி, தே.மு.தி.க.வின் வருகை, பா.ஜ.க.வை எதிர்க்க வலுவான கூட்டணியை அமைக்க ஒத்துழைப்பு தாருங்கள் என தி.மு.க. குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, உங்களின் இடங்களிலிருந்தும்தான் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று தி.மு.க.வினர் குறிப்பிட்டுள்ளனர்.

அணியை வலுப்படுத்துவதில் மாற்றுக் கருத்தில்லை என ஒப்புக்கொண்ட சி.பி.எம். குழுவினர், மாநிலச் செயற்குழுவில் பேசிவிட்டு வருவதாகப் புறப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் எப்போதும் சில செயற்குழு உறுப்பினர்கள் பணியில் இருந்தாலும், தேர்தல் பேச்சுவார்த்தையை முன்னிட்டு மற்ற உறுப்பினர்களும் வருகை புரிந்துள்ளனர். நேற்றும் இன்றும் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டமும் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஆலோசனையும் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இரு கட்சிகளின் நிர்வாகிகளுமே கடந்த முறை பெற்ற இடங்களைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியாவது பெறவேண்டும்; வேறு வழியே இல்லையென்றால் ஆறு தொகுதிகளையாவது உறுதிப்படுத்த வேண்டும் என்று தீர்மானகரமாகக் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரவுக்குள் தி.மு.க. அழைப்பு வரலாம் என்றும் இரு கட்சிகளின் தரப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு இலட்சியம் என்பதை இரு கட்சிகளும் மறந்துவிட வேண்டும் என்பதை தி.மு.க. தரப்பு பூடகமாக உணர்த்திவிட்டது. எனவே, ஏழு இலட்சியம் ஆறு நிச்சயம் என்கிற முடிவில் இடதுசாரி கட்சிகள் இருக்கின்றன.

தி.மு.க. இதை ஆமோதித்துவிட்டால் இன்று இரவே உடன்பாடு முடிவாகிவிடும்!