மின்சார ரயில்  
செய்திக் கட்டுரை

2.75 இலட்சம் பயணியர்க்கு 45 நாள்கள்....சென்னை மின்ரயில் அவதி!

Staff Writer

தலைநகர் சென்னையில் மின்சாரத் தொடர்வண்டிகளில் செங்கல்பட்டு- கடற்கரை வழித்தடத்தில் அன்றாடம் 2.75 இலட்சம் பேர் பயணித்து வருகின்றனர். எழும்பூர் இரயில்நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வரும் ஏப்ரல் 5ஆம் தேதிவரை 44 சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம் தொடங்கிய நேற்றிலிருந்து வழக்கமாகச் செல்லும் பயணியர் கடுமையாக அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

காலையிலும் மாலையிலும் நெரிசல் நேரத்தில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை என மின்சாரத் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சுமார் 735 கோடி ரூபாயில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 10ஆவது, 11ஆவது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த இரு பகுதிகள் வழியாகத்தான் மின்சாரத் தொடர்வண்டிகள் எளிதாக ஓரிரு நிமிடங்களில் உள்ளேபுகுந்து நிலையத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தன.

மேம்பாட்டுப் பணியால் 5ஆவது, 6ஆவது நடைமேடைப் பகுதிகள் வழியாக இவை திருப்பிவிடப்படுகின்றன. இதனால் இருப்புப்பாதையைக் கடப்பதும் சிக்னல் பெறுவதும் 10 நிமிடங்கள்வரை காலம் எடுத்துக்கொள்கிறது.

மொத்தம் 275 சேவைகள் இயக்கப்பட்டு வந்தநிலையில் 44 சேவைகள் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணியரின் கூட்டமும் குறிப்பிட்ட நேரத்தில் திரண்டுவிடுகிறது. இத்துடன் எழும்பூர் நிலையத்தில் ஏற்படும் தாமதமும் சேர்ந்துகொள்ள மின்சாரத் தொடர்வண்டிப் போக்குவரத் து பயணியருக்குத் தொந்தரவாக மாறியுள்ளது.

முதல் நாளான நேற்று எழும்பூருக்கு முன்னதாக சேத்துப்பட்டு நிலையத்திலேயே தொடர்வண்டிகள் சிக்னல் கிடைக்க நேரமாகி நின்றபடி இருந்ததால் வெறுத்துப்போன பயணியர், இறங்கி பேருந்தைப் பிடிக்க நடந்துசென்றனர்.

மெட்ரோ தொடர்வண்டிகளிலும் கூட்டம் அலைமோதியது.

கூடுதல் பேருந்துகள் விடப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் பயணியருக்குப் போதுமானதாக அவை இல்லை. செங்கல்பட்டைத் தாண்டி கூடுவாஞ்சேரி, தாம்பரம், கிண்டி என பேருந்துநிலையங்களில் சென்னைக்குள் செல்லக்கூடிய பேருந்துகளுக்காக மக்கள் அலைமோதினார்கள்.

இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால், பொதுவாக கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்பதால், இன்று மக்களின் அவதி கொஞ்சம் குறைந்து காணப்பட்டது.

திங்கள் முதல் மாற்று ஏற்பாடுகளைப் பொறுத்துதான் மின்சாரத் தொடர்வண்டிப் பயணியரின் நிலைமை என்ன ஆகும் என்பது தெரியவரும்.