டாக்டர் கோமி வியாஸ் தன் கணவர், குழந்தைகளுடன்! 
செய்திக் கட்டுரை

மனைவியின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியவரின் கதி!

Staff Writer

அகமதாபாத் கோர விமான விபத்து பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வரவர, ஒன்றைவிட அடுத்தது துயரத்துக்கு மேல் துயரமாக மனதைப் பிழிகின்றன.

மகளைப் பார்த்துவிட்டு மனைவியை அழைத்துவரச் சென்ற முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, விமானம் புறப்பட்டதும் இலண்டனில் இறங்கியதும் அழைக்கிறேன் என வீட்டாரிடம் சொல்லிவிட்டு விமானத்தை இயக்கிய விமானி ஆகியோரைப் போல, பல்வேறு தொழில்சார்ந்தவர்களின் கனவுகளும் வாழ்க்கையும் சிறிது நேரத்தில் சாம்பலாகிவிட்டன.

உதய்ப்பூரில் பார்த்துவந்த வேலையிலிருந்து விலகி, கணவர் டாக்டர் பிரதீக் ஜோசி, மூன்று குழந்தைகள் 8 வயது மிராயா, 5 வயது இரட்டையர்கள் நகுல், பிராட்யூத் என ஐந்து பேருமாக பிரிட்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகப் புறப்பட்டார், பெண் மருத்துவர் கோமி வியாஸ். அந்தோ சோகம்... அவர்களும் 241 பேர் பட்டியலில் அடங்கும் நிலை ஆனது.

இந்தத் துயரமாவது, சம்பந்தப்பட்டவர்களுடனேயே போயிற்று எனக் கருதி சற்றே பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

குஜராத்தின் அர்மேலி மாவட்டம், வாடியா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் மனுபாய் படோலியா என்பவரின் மனைவி, பாரதிபென். அவரின் கடைசி ஆசை, தான் இறந்துபோய்விட்டால் தன்னுடைய அஸ்தியை பூர்வீக கிராமமான வாடியாவில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கவேண்டும் என்பது! சொல்லிவைத்ததைப் போலவோ என்னவோ திடீரென கடந்த வாரம் பென் இறந்துவிட்டார்.

அங்கு அவரின் இறுதிச் சடங்குகளை முடித்துக்கொண்டு வாடியாவுக்கு அஸ்தியைக் கரைக்க எடுத்துவந்தார், படோலியா. மொத்த கிராமமே திரண்டுவந்து அஸ்தி கரைப்பில் கலந்துகொண்டது.

அதை முடித்துக்கொண்டு இலண்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அர்ஜூனும் அகமதாபாத்தைத் தாண்டவில்லை. விமான விபத்தில் இறந்துபோனார்.

தம்பதியருக்கு 8 வயது, 5 வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் இப்போது இலண்டனில்... ஆம், அவர்களை விட்டுவிட்டுதான் தனியாக குஜராத்துக்கு வந்தார், அர்ஜூன்.

மனைவி இறந்த ஒரு வாரத்துக்குள் அவரும் கோர விபத்தில் உயிரிழந்துவிட... அர்ஜூனின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார். சூரத்தில் வசித்துவரும் வயது முதிர்ந்த அர்ஜூனின் தாயார், இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவரால் இவ்வளவு தொலைவுக்கு வரவும் முடியவில்லை.

இதனிடையே, மனைவியின் அஸ்தியைக் கரைக்க நாடுவிட்டு நாடு வந்த அர்ஜூனுக்கு இறுதி்ச் சடங்கு செய்வது யார் என்பது கேள்வியாகி உள்ளதாம்!

அதைவிட முக்கியம், ஒரே வாரத்தில் தந்தையையும் தாயையும் இழந்த அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை இனி யார் கவனித்துக்கொள்ளப் போகிறார்கள்?

தாயாக தந்தையாக யாரால் இருந்துவிடமுடியும்?

உண்மையில், இது எவ்வளவு பெரும் துயரம் வாழ்க்கையில்!