தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத் துப்புரவுப் பணியாளர்களை உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று நள்ளிரவில் போலீஸ் துறை பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தியது.
கடந்த 13 நாள்களாக நீடித்துவந்த ரிப்பன் மாளிகை போராட்டம் இத்துடன் முடிவுக்கு வந்தது.
இதுவரை நடந்தது என்ன?
சென்னை மாநகராட்சியில் தே.ந.வா.திட்டத்தின்படி ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பதினைந்து ஆண்டுகளாக இவர்கள் பணியில் இருக்கும்நிலையில், பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர்.
1,903 பேர்
இந்த நிலையில் திடீரென இந்த மாதம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியை, சர்ச்சைக்குரிய ஆந்திர மாநில இராம்கி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனால், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டப் பணியாளர்கள் 1,903 பேர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொந்தளிப்பின் காரணம்
தற்காலிகப் பணியாக இருந்தாலும் திட்டப் பணியாளராக ஒரு கட்டத்தில் நிரந்தரம் கிடைத்துவிடும் என நம்பிக்கொண்டிருந்தவர்களை, திடீரென தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியில் சேரவேண்டும் இல்லாவிட்டால் வேலை இல்லை என அறிவித்தது, துப்புரவுப் பணியாளர்களைக் கொந்தளிக்க வைத்தது.
5 பெண்களின் போராட்டம்
கடந்த மாதம் ஜூலை 25ஆம் தேதியன்று அம்பத்தூர் மண்டலத்தில், உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, குட்டியம்மா, ஜோதி, வசந்தி, அஷ்ரப் பேகம் ஆகிய தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். போராட்டம் கவனம் பெற்ற நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நான்காவது நாளன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 5ஆவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது.
தொழில் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்ட வழக்கு
கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனத்துக்கு இலாபம் கிடைப்பதற்காக திட்டப் பணியாளர்களைத் தாரைவார்க்காதே என ஐந்து பெண்களின் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனிடையே, பணி நிரந்தரம் வேண்டும் என அவர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. போராட்டம் காரணமாக, நிரந்தரக் கோரிக்கை வழக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தொழில் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது. அதை முதல் கட்ட வெற்றியாகக் கருதி ஐந்து பெண் தொழிலாளர்களும் தங்களின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
வழக்கு நிலுவை... தனியார்மயம்
திட்டத் துப்புரவுப் பணியாளர்களின் வழக்கு தொழில் தீர்ப்பாயத்துக்குப் போய்விட்டதே ஜூலை 30ஆம் தேதியன்று பெண் தொழிலாளர்கள் நிம்மதியாக உண்ணாவிரதத்தை முடித்தாலும், ஏற்கெனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 1 முதல் தனியார் இராம்கி நிறுவனத்தின் பணியாளர்களாக மாற்றப்படுவீர்கள் என மாநகராட்சி அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்தனர். அதாவது, இனி அவர்கள் மாநகராட்சியின் தற்காலிகப் பணியாளர்கள் இல்லை; சர்ச்சைக்குரிய தனியார் நிறுவனமான இராம்கியின் ஊழியர்கள்தான்; அவர்கள் தரும் குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். 23ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் பெற்றுவந்த தூய்மைப்பணியாளர்கள், அதைவிட 7 ஆயிரம் ரூபாய்வரை குறைவாகப் பெற்றுக்கொள்வதை ஏற்கமுடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரிப்பன் மாளிகை போராட்டம்
சென்னையின் முக்கிய போக்குவரத்துச் சந்தியான செண்ட்ரல் இரயில்நிலையம், இராஜீவ்காந்தி மருத்துவமனை ஆகியவற்றின் அருகில் இருக்கிறது, மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் கட்டடம். தங்கள் கோரிக்கையை மேயருக்கும் அரசுக்கும் தெரிவிக்கும்வகையில் பணி நிரந்தரம்- தனியாருக்கு விட எதிர்ப்பு கோரிக்கையை வைத்து, உழைப்போர் உரிமை இயக்கம் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று தொடர் போராட்டத்தைத் தொடங்கினர்.
சின்மயி, மதுவந்தி, சீமான்!
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று ஒரு வாரத்தை எட்டும் என அதிகார மட்டம் எதிர்பார்த்திருக்கவில்லை. பல ஊடகங்களும் அதிகமான நேரம் நேரலையாகக் காட்டியது பரவலாகக் கொண்டுசேர்த்தது. தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சில சமூக ஊடகப் பிரபலங்கள் உட்பட பலரும் போராட்டக்களத்துக்கு வந்து ஆதரவைத் தெரிவித்தனர். குறிப்பாக, பாடகர் சின்மயி, பா.ஜ.க. மதுவந்தி ஆகியோரைத் தொடர்ந்து, நா.த.க. தலைவர் சீமான் என ஒரு படையே வாழ்த்திச் சென்றது.
திருமா, இடதுசாரி தலைவர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் அ.தி.மு.க.வை முதலில் காணமுடியவில்லை; அறிக்கை மட்டும் வந்தது. ஆளும் கட்சிக்கும் அதற்குமான இலாவணிக் கச்சேரியாகவும் இருந்தது. பின்னர் ஜெயக்குமார் வந்தார். விஜய் கட்சியின் ஆதவ் அர்ஜூனா வந்தார். இந்த சூழலில், வி.சி.க. தலைவர் திருமாவளவன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ செயலாளர் முத்தரசன் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
தேன்மொழி வழக்கு
இறுதியாக, பிராட்வே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மனைவி தேன்மொழிக்கு, இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு என்று தோன்றியதாகவும் அதனால் அவர் பெயரில் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில்தான், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்கு காட்டிய போலீஸ்
பிற்பகலில் உத்தரவு வந்தபோதும் பேச்சுவார்த்தை நடத்துவதாக, நகராட்சித் துறை அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா, இன்னோர் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உழைப்போர் உரிமை இயக்கத்தினரை அழைத்தனர். மாலை 4 மணிவாக்கில் தொடங்கிய பேச்சுவார்த்தை அரை மணி நேரத்தில் முடிவடைந்தது. தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
இரு தரப்பும் தம் நிலையில்
உயர்நீதிமன்றம் கலைந்துசென்று வேறு இடத்தில் போராடிக்கொள்ளுமாறு உத்தரவிட்டும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தங்கள் தலைமை அலுவலகத்தின் முன்பாகத்தான் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துவிட்டனர். எதிர்த்தரப்பில் போலீசோ 15 பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்தியது. ஆயிரம் பேருக்கும் மேல் போராட்டக்களத்தில் இருக்க, அவர்களுக்கு ஆதரவுதெரிவித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வழக்குரைஞர்களும் அங்கே திரண்டுநிற்க, சில மணி நேரங்கள் போர்க்களம்போல மாறியது, அந்த இடம்.
முதலில் மொத்தமாய்க் குவிக்கப்பட்ட போலீசார், போராட்டக் குழுவினரிடமிருந்து அகன்று நின்றனர். ஊரே அடங்கியிருக்கும் நள்ளிரவு வரும்வரை காத்திருந்து, பெரும் படையோடு தூய்மைப் பணியாளர்களை வைத்திருந்த பேருந்துகளில் அள்ளிப்போடத் தொடங்கியது. அப்போது பல பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி செய்துகொண்டிருந்தபோதே மற்ற பெண்களையும் போலீசு தரதரவெனப் பிடித்து இழுத்துச்சென்றது. அதைக் கண்டித்து அந்தப் பெண் தொழிலாளர்கள் பெண் காவலர்களை சாபமிட்டனர்.
ஜோதி என்பவர் மயக்கநிலையிலேயே எந்த முதலுதவியும் தரப்படாமல் பேருந்திலேயே விடப்பட்டிருந்ததாக போராட்டக் குழுவினரும் பல அமைப்பினரும் ஒருசேரத் தெரிவித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
அண்மைத் தகவல்:
போலீசால் கைதுசெய்யப்பட்டவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர் நிலவுமொழி என்பவர் தாக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சட்டமாணவர் வளர்மதியும் போராடியவர்களுக்கு ஆதரவான சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்றும் அவர்களின் சகாக்கள் தெரிவிக்கின்றனர்.