சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி 
செய்திக் கட்டுரை

நற்போக்கும்... இது வேற லெவல் புத்தகக் காட்சி!

இரா. தமிழ்க்கனல்

வண்ண வண்ண விளக்குகளால் இதுவரை இல்லாதபடிக்கு ஜொலிக்கும் வள்ளுவர் கோட்டம்...

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோட்டத்துக்குள் ஒரே கூட்டம்! உள்ளே, திராவிடர் இயக்கம், தி.மு.க. தொடர்பான கருத்தரங்குகள் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன. உள்ளூர், வெளியூர் என்பதைவிட வெளி மாவட்டங்களிலிருந்தெல்லாம் இளைஞர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அருகிலேயே ஒரு புத்தகக் காட்சி, வித்தியாசமாக!

தலைப்பே, முற்போக்கு புத்தகக் காட்சி என்று வித்தியாசமாக இருந்தது. இதை நடத்துவது, முத்தமிழறிஞர் பதிப்பகம். இது, தி.மு.க. இளைஞர் அணியின் ஓர் அங்கம் (என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்).

புத்தகக் காட்சி அரங்கில் நுழைந்ததும், இவ்வளவு காவல்துறை வாசகர்களா என ஒரே போலீஸ் கூட்டம்... வியப்பை ஏற்படுத்தியது. பிறகுதான் தெரிந்தது, பக்கத்து அரங்கில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் துணைமுதலமைச்சரும் பங்கேற்க வந்திருந்தார். அதையொட்டி பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் புத்தகக்காட்சி பக்கமும் வந்திருந்தனர் என்று!!

ஐப்பசியின் அடைமழை இல்லாத குளிரைவிடத் தூக்கலான அரங்கின் குளிர் நம்மை வரவேற்றது.

பிரபல அறிவியல், வரலாற்றுப் புனைவு எழுத்தாளர் தமிழ்மகன், வழக்கமான புன்னகையுடன் இன்னும் குளுமையாக வரவேற்றார், உள்ளங் கைகளைத் தேய்த்தபடி!

முதல் அரங்கமே முத்தமிழறிஞர் பதிப்பகக் கடைதான். வாசகர்கள் தாராளமாக வந்துசென்றபடி இருந்தனர். முந்தைய நாள் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட ’காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ எனும் புத்தகம் சூட்டோடு சூடாக விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது.

புத்தகக்காட்சியின் அழைப்பிலேயே ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிட்டார்கள், இது அரசியல் நூல்களின் அணிவகுப்பு என... அதற்கு ஏற்றபடியே பார்வையாளர்களும் வந்துபோனார்கள்.

மூன்றில் ஒரு பகுதியினர் கட்சி இளைஞர்களாக இருந்தனர். எப்போதும் புத்தகக் காட்சியின் பக்கம் எட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம், அன்றைக்கும் வந்திருந்தது.

சில அரங்குகளில் வாசகர்களும் விற்பனையாளர்களும் தீவிரமாக விவாதித்தபடி இருந்த காட்சி, ஏதோ அரசியல் பட்டிமன்ற அரங்கத்திற்குள் வந்துவிட்டோமோ என்கிற எண்ணத்தைத் தந்தது.

அவர்களின் பேச்சின் இலக்கை அடைந்துவிடும் வேட்கையும் தீவிரமும் முக ரேகைகளில் ஆயிரம் வோல்ட்டு மின்சாரம் போல அவ்வளவு பளிச்சிட்டது.

சில இடங்களில் அமைதியாக வந்திருந்து புத்தகங்களைப் படித்து, உள்ளடக்கத்தைப் பார்த்து, வரிசையாக கையில் புத்தகங்களை அடுக்கி கொள்முதல் செய்தபடி தம்பாட்டுக்குப் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசம். இப்படியானவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தது, ஏதோ தியானக் காட்சிக் காணொலியைப் பார்த்ததைப் போல உணர்ந்த வேளையாக அமைந்தது!

மொத்தம் 46 பதிப்பகங்கள் (சிலை அரங்கைத் தவிர்த்தால் 45), 58 கடைகள் என ஆர்ப்பாட்டம், வெற்றுக் கூச்சல் இல்லாமல் வாசகர்களுக்கு வசதியாக அரங்கை அமைத்திருக்கிறார்கள், ஏற்பாட்டாளர்கள்.

பெரும்பாலும் திராவிடர் இயக்கக் கொள்கை தொடர்பான, திராவிடக் கருத்தாளர்களின் எழுத்துகள் அடங்கிய புத்தகங்கள் அரங்கின் எல்லா கடைகளிலும் காணக் கிடைத்தன.

இதே சமயம், திராவிடர் இயக்கத்தை விமர்சிக்கக்கூடிய வேறு சிந்தனைப் போக்குள்ள புத்தகங்களும் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பொதுவுடைமை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் ஆகியவற்றின் புத்தகங்களும், மேற்கத்திய இடதுசாரி ஆய்வு நூல்களும், தமக்கான தனித்தனி கடைகளைப் பிடித்திருந்தன.

மாற்றான் தோட்டத்து மல்லிகை

இதுதான், இந்தப் புத்தகக் காட்சியின் முக்கியமான அம்சம். அதாவது, முற்போக்கு முகாம்களில், தான் மட்டுமே முற்போக்கு எனக் கூறிக்கொள்ளும் ஒரு போக்கு நெடுங்காலமாக இருந்துவரும் சூழலில், தி.மு.க. போன்ற தேர்தல் அரசியல் கட்சியின் இளைஞர் அமைப்பு இந்தப் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இப்படியொரு நிகழ்வில், திராவிடர் இயக்கத்தை விமர்சிக்கும் இயக்கங்களுக்கும் இடமளித்து பல்வேறு கருத்தோட்டங்களை வாசகர்களிடையே பரவ உதவியாக இருப்பது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றும்கூட!

காசு முக்கியம்தானே!

வாசகர்கள், குறிப்பாக/ன அரசியல் வாசகர்களுக்கு இப்படியொரு வாய்ப்பு அரிதானது எனப் பல தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.

தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட வகைப் புத்தகங்களுக்கு மட்டுமேயான ஒரு தனித்த புத்தகக்காட்சி என்பதை, அனுபவித்து வாங்கிச்செல்பவர்கள் மூலம் நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

விற்பனை நோக்கில் பார்த்தாலும், எந்தப் பதிப்பகத்தாருக்கும் கையைக் கடிக்கும்படியாக நிச்சயம் இந்தக் காட்சி விற்பனை இல்லை என அடித்துக்கூறுகிறார்கள், பெயரை வெளியிட விரும்பாத பதிப்பாளர் சிலர். இலாபத்தில் குறைவாக வந்தாலும்கூட இப்படியான பழக்கத்தை உருவாக்குவதும் தொடர்ந்து நிலைநிறுத்துவதும் பதிப்பாளர்களுக்கும் முக்கியம்தான் என அர்த்தபூர்வமாக அழுத்திச் சொன்னார், மூத்த பதிப்பாளர் ஒருவர்.

சமூக நீதிப் பங்கீடு!

தவறாமல், திருநர்களுக்கான இடப் பங்கீடும் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியது, திருநங்கை பிரஸ் அரங்கு.

பெரியார் தொடங்கிய சுயமரியாதைப் பிரச்சார பதிப்பகத்துக்கும் இடம் உண்டு... புத்தம்புதிய பதிப்பக முனைவோராக இருந்தாலும், அவர்களின் பதிப்பு முயற்சிகளை அங்கீகரித்து, அய்யுறு வெளியீடு, காட்டாறு வெளியீடு போன்றவற்றுக்கும் கடைகள் உண்டு.

50% விலையில்!

உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி 600+ பக்கங்களில் வெளியான- மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் புத்தகத்தை இந்தக் காட்சிக்காக மட்டும், 50% விலையில் கிடைக்கிறது, பெரியார் புக்ஸ் டாட் காம் கடையில்.

பெரியாரியல் அறிஞர் ஆனைமுத்துவின் 1980, 90, 2000- ஆண்டுக் காலப் புத்தகங்கள் சிறிய வடிவில், குறைந்த விலையில் எளிதில் புரியும்படியானவை, அரிதாக இந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டவை.

நற்போக்கும்!

தலித் முரசு பதிப்பகத்தில் மாரிஜாப்பி படுகொலைகள் என ஒரு புத்தகம் வெளியாகி, முன்னர் பெரும் சர்ச்சையாகி, மேற்குவங்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு சங்கடத்தை உண்டாக்கியது. அதற்குப் பதில்கூறும் வகையில், மரிஜாப்பி - ஒரு தலித் அகதியின் சாட்சியம் என பாரதி புத்தகாலயத்தில் வந்த புத்தகமும் இடம்பெற்றுள்ளது.

சூழலிய நூல்களுடன் இடதுசாரி அரசியல், திறனாய்வு, கலை இலக்கிய விமர்சன நூல்களும், திராவிடவியல் ஆய்வாளர் பொதியவெற்பனின் நூல்களும் கொண்ட உயிர் அரங்கும் இந்தக் காட்சியில் வித்தியாசமானதுதான்.

இப்படி, சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், எல்லாம் ’வேற லெவல்’ என்கிறார்களே, அந்த மாதிரி... நற்போக்கு என்றும் சொல்லலாம்!

அருவி பொத்தக உலகம் அரங்கில் விற்பனைக்கு இருந்த தன்னார்வலர் சிறார்- இளைஞர் கோவழகன், அங்கிருக்கும் புத்தகம் ஒன்றை எடுத்ததுதான் தாமதம். அப்படியொரு தனித்தமிழ்ப் பேச்சாலே நம்மைக் கட்டிப்போட்டுவிட்டார். பன்னிரண்டாம் வகுப்பு கணிதயவியல்- உயிரியல் பிரிவுப் பாடம் படிக்கிறாராம். சொன்னார், அழகு தமிழ் என்னே என்னே!

தனித்தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனாரின் புத்தகங்கள், அவர் நடத்திய இதழ்கள், இடையில் நின்றுபோன இதழ்கள், சில கட்டுரைத் தொகுதிகளில் உள்ள புத்தகங்களைப் பற்றி சரளமாக எடுத்துக்கூறினார். இந்த வயதில் அவருடைய தமிழாற்றலும் நினைவாற்றலும் இன்ப அதிர்ச்சியாக வியக்கவைத்தது.

அவருடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள முடியாதபடியாக கடிகார நினைவூட்டல் ஒன்று வர, அனிச்சையாய் அடுத்த கடைக்கு ஓடவேண்டியதாயிற்று.

சில கடைகள் தாண்டியபின்னர்தான் அதைப் பற்றிய நினைவே வந்தது.

அதற்குள் காட்சி மூடும் நேரமும் வந்துவிட்டது.

கையைப் பிடித்துக்கொண்டார், நண்பர் ஒருவர்.

”அடடா, என்னா குளுரு என்னா குளுரு... அந்த ஏசியைக் கொஞ்சம் குறைப்பாங்களா?” என்றவரின் கை, விறைப்பாய் இருந்தது!

ஆமாம், ரொம்பக் குளிரவைக்கிறார்கள், வழக்கமான புத்தகக்காட்சி புளுக்கத்துக்கு மாற்றாக!