கரூர்க்காரரான செந்தில் பாலாஜியை கோவை தெற்கு வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது, பல தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். ஆனால் உட்கட்சி வட்டாரங்களில் இதற்கு பெரிய ரியாக்சன் இல்லை.
ஒரே குறிக்கோள்தான் தி.மு.க.வுக்கு... கோவையின் மொத்த பத்து தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும். ஆனால் ஒரு தொகுதியில்கூட தற்போது அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கவில்லை. பிறகு எப்படி சாத்தியம்? அதைச் சாத்தியமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் செ.பா.யை இறக்கிவிட்டார்கள், சில ஆண்டுகளுக்கு முன்னரே!
கடந்த மக்களவைத் தேர்தலில் முன்கூட்டியே கள வேலைகளைச் செய்து தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட முயன்றவருக்கு, அமலாக்கத் துறையின் வடிவில் சிக்கல் வந்தது. 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று அவரைக் கைதுசெய்த நிலையில், 471 நாள்கள் சிறையில் முடக்கப்பட்டார்.
ஜாமீனிலில் வெளியேவந்தவர், 2024 செப்டம்பர் முதல் மீண்டும் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக மேலும் தீவிரத்துடன் களமிறங்கினார்.
கட்சியில் அவருக்கு ஒத்துவராதவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். மாநகரச் செயலாளராக இருந்துவந்த கார்த்தியின் பதவியும் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட செ.பா.வின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் நிர்வாகிகளாக நீடிக்கவும் புதியதாக நியமிக்கப்படவும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான் தி.மு.க. வேட்பாளர் தேர்வுப் பணிகளும் தொடங்கின. இதிலும் செந்தில் பாலாஜியின் கை ஓங்கியது.
கமல்ஹாசனின் ம.நீ.ம. கட்சியிலிருந்து வந்த டாக்டர் மகேந்திரனுக்கு இந்த முறை கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது. அவர் கடந்த முறை தன்னுடைய செல்வாக்குப் பகுதியான இதை கட்சித் தலைவர் கமல் வசம் விட்டுவிட்டு வடக்குப் பக்கம் நகர்ந்துவிட்டார். தி.மு.க.வுக்கு வந்தபிறகு அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கோவை தெற்கு அவருக்குதான் என்றே கருதப்பட்டது. ஏனெனில் உறுதியாக அவருக்கு சாதிசார்ந்த 30 ஆயிரம் வாக்குகள் உறுதி என்பது கணிப்பு. ஆனால், அவருடைய தொகுதியிலேயே வேட்பாளராக வந்திறங்கினார், செ.பா. இது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!
மகேந்திரனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
பதிலாக, பாலாஜியின் தலைமையை ஏற்பவர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கோவையில் பத்துக்குப் பத்து மட்டும் என்றில்லாமல், கொங்கு பகுதிகளில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளையும் பிடித்துவிட வேண்டும் என்பது பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட்.
அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன் ஆகியோரை மீறி, செந்தில்பாலாஜிக்கு இந்த முக்கியத்துவம் தந்திருக்கிறது, கட்சித் தலைமை.
குறிப்பாக, கோவையில் மறைந்த அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்குப் பிறகு, சரிவுநிலைக்குச் சென்ற தி.மு.க.வை மீட்டு எடுப்பதற்கு இன்னொரு முகமாக- உள்ளூர் முகம்போல மாறவேண்டும் என்பதும் செ.பா.வுக்கான அசைன்மெண்ட்.
அதில் வெல்வாரா என்பதை தேர்தல் முடிவுதான் சொல்லவேண்டும்.