பா.ஜ.க. அணியில் மூழ்கியிருந்த ஓ.பன்னீர் திடீரென எதிர்க்கட்சியான தி.மு.க. பக்கம் சாய்கிறாரோ என்று பேச்சு எழும் அளவுக்கு அரசியல் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன.
அ.தி.மு.க.வில் இருந்தபோதும் தனியாக இருந்தபோதும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமாக இருந்தவர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கடந்த 2017 முதல் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தனியாகச் சென்றபிறகும், பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டைத் தொடர்ந்தார்.
ஆனால், அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்துசென்ற பிரதமர் மோடியைச் சந்திக்க கூட்டணித் தலைவர்களில் ஒருவரான பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பே தரப்படவில்லை. முன்னாள் முதலமைச்சரான பன்னீரை அனுமதிக்காத நிலையில், த.மா.கா. தலைவர் வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் சண்முகம் ஆகியோருக்கு மட்டும் மோடியைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் கடுமையாக அதிருப்தியடைந்த ஓ.பன்னீர் அணியினர், அவரை பா.ஜ.க. வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டது; அவமானப்படுத்தி விட்டது என்று பொறுமினார்கள்.
அதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று ஓ.பன்னீர் அணியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய ஆலோசனை மூன்று மணி தொடர்ந்து மதியம் முடிவடைந்தது. பின்னர் ஊடகத்தினரைச் சந்தித்த பண்ருட்டி இராமச்சந்திரன், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தார்.
இந்த சூழலில் திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலையில் நடைப்பயிற்சியின்போது சந்தித்தார். தற்செயலாக சந்தித்ததாக இரு தரப்பினரும் கூறிக்கொண்டனர்.
அதையடுத்து, மாலையில் ஸ்டாலினை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார், ஓ.பன்னீர்செல்வம். மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பியவரைப் பார்த்து நலம் விசாரித்ததாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் பன்னீர் விளக்கம் அளித்தார்.
ஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என அவரே சொன்னதையும் எளிதாகக் கடந்துபோக முடியாத ஒன்று.
முன்னதாக, நடிகர் விஜய் பக்கம் பன்னீர் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அங்கு பன்னீரின் வருகைக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரும்நிலையில், பன்னீர்செல்வத்தை ஓரமாக வைத்திருக்கக்கூட விரும்பவில்லை என்பதைக் காட்டிவிட்டது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வடமாநிலங்களைப் போல அண்மை சில ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் நலம், துக்கம் விசாரிப்பது இயல்பாகி வருகிறது. இந்தத் தொடர்ச்சியில் பன்னீரும் ஸ்டாலினை நலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் சொன்னபடி அரசியல் பேசப்படவில்லை என்பதை சிறு குழந்தையும் நம்புமா என்பது பெரும் கேள்வி!
சில வாரங்களுக்கு முன்னர் ஸ்டாலின் ஒரு பேட்டியின்போது, கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாகவும் இந்தச் சந்திப்பு இருக்கக்கூடும் என்பது அரசியல் வட்டாரக் கணிப்பு.
ஆனால் இன்றைக்கு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரிடம் பேசுவதுதான் பிரச்னை என்றால் தானே நேரம் வாங்கித் தந்திருக்கமுடியும் என்று கூறினார். ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் ஓ.பன்னீர் தரப்பை இது இன்னும் கோபத்தைக் கூட்டிவிட்டது.
ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு கூட்டணியில் சந்திப்பு நேரம் கேட்பதைக்கூட பொதுவெளியில் கடிதத்தைக் கசியவிட்டதெல்லாம் என்ன ஒரு தர்மம் என ஏகத்துக்கும் குமுறுகிறார்கள், பன்னீர் அணியினர்.
எடப்பாடியுடன் கைகோத்த காரணத்துக்காக என்ன வேணுமென்றாலும் செய்வீர்கள் என்றால், எங்களைத் தக்கவைத்துக்கொள்ள நாங்களும் எதுவும் செய்யமுடியும் எனச் சீறுகிறார்கள், பன்னீர் அணியினர்.
என்னப்பா என்று கேட்டால், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!