அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு தமிழகத்தில் பொருளாதாரத்தைத் திரட்டவேண்டும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளையும் நடத்தி முதலீடுகளை ஈர்க்க முனைந்து வருகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பிலோ இதைக் கடுமையாக விமர்சிப்பதுடன், முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி வருகின்றன. குறிப்பாக, பா.ம.க. தரப்பில் இராமதாசும் அன்புமணியும் இதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு கேட்டதற்கு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா, எதுவும் எழுதப்படாத ஒரு வெள்ளைக் காகிதத்தைக் காண்பித்தார். அதனால் இந்த விவகாரம் மேலும் சூடானது. அமைச்சர் எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, மக்களையும் அவமதித்துவிட்டதாக பழனிசாமி பல இடங்களில் பேசவும் செய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கூறிவரும் முதலீடு தொடர்பான தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் 34 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என மோசடி செய்துள்ளதாகவும் அன்புமணி பா.ம.க. தரப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் :
1. 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.11.32 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டுக்கான 1059 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பல்வேறு நிறுவனங்களுடன் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தொழில் முதலீடுகளின் நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசு வெளிப்படையாக எதையும் தெரிவிக்க மறுக்கிறது. ஒட்டுமொத்த முதலீடுகளில் 77 விழுக்காடும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 விழுக்காடும் செயல்பாட்டு வந்துவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இல்லை.
3. இன்னொரு பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் தொழில்துறை அமைச்சரும், இந்நாள் நிதித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோரும் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகவும், அதனால் 34 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால், அதில் எள்ளளவும் உண்மை இல்லை.
4. தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன? எங்கெங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன? அவற்றின் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? என்பது குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு செவிசாய்க்க மறுக்கிறது. அதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில், “திமுக அரசின் தொழில் (பொய்) முதலீடுகள்” என்ற தலைப்பிலான ஆவணத்தை பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கி வெளியிடுகிறது.
5. தமிழ்நாட்டின் தொழில் மற்றும் முதலீட்டுத்துறை, Guidance எனப்படும் வழிகாட்டி நிறுவனம், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து தனிப்பட்ட முறையில் திரட்டப்பட்ட தரவுகள், தமிழ்நாடு அரசு பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்ட செய்திக் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆவணம் இயன்றவரை துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
6. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரம்
* 2025 செப்டம்பர் மாதம் வரை கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை - 1059
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு - ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 575 கோடி
* கிடைக்கக் கூடிய மொத்த வேலைவாய்ப்புகள் - 34 லட்சத்து 2 ஆயிரத்து 998
7. கிடைத்த தொழில் முதலீடுகளின் உண்மை நிலை
* ரூ.1000 கோடிக்கும் கூடுதலான மதிப்பு கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
(எ.கா.) வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும்; 3,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் மகிழுந்து உற்பத்தியை தொடங்கிவிட்டது. ஆனால், இதுவரை ரூ.4,000 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது. முழு முதலீடு வர 10 ஆண்டுகள் ஆகும்.
8. வராத பெரு நிறுவன முதலீடுகள்
1. டாடா பவர் - ரூ.70,800 கோடி
2. ஏசிஎம்இ கிளீன்டெக் - ரூ.52,474 கோடி
3. அதானி குழுமம் - ரூ.42,768 கோடி
4. சிங்கப்பூர் செம்ப்கார்ப் - ரூ.36,238 கோடி
5. பெட்ரோனாஸ் - ரூ.30,000 கோடி
6. சிங்கப்பூர் ஐஜிஎஸ்எஸ் - ரூ-.25,600 கோடி
7. சிபிசிஎல் - ரூ.17,000 கோடி
8. ஜே.எஸ்.டபிள்யூ. - ரூ.12,000 கோடி
9. 2021 - 22ஆம் ஆண்டு
* 2021 -- 22ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான ஒப்பந்தங்கள் தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கானவை.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.68,405.54 கோடி
* கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ளவை - 24
* அவற்றில் முதல்கட்ட முதலீடு செய்து உற்பத்தி தொடங்கிய நிறுவனங்கள் - 9
10. முதல்கட்ட முதலீடு செய்த நிறுவனங்கள்
1. இசட்எப் இந்தியா
2. ஜே.எஸ்.டபிள்யூ. எரிசக்தி
3. டி.பி.வேர்ல்டு
4. சிம்பிள் எனர்ஜி
5. கண்ட்ரோல் எஸ்
6. கிம்ஸ் ஹெல்த் கேர்
7. சமீரா வேர்
8. லூகாஸ் டிவிஎஸ்
9. எல் & டி தரவு மையம்
மேற்கண்ட 9 நிறுவனங்களும் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8% முதல் 15% மட்டுமே செய்துள்ளன.
11. 2021 - 22ஆம் ஆண்டில் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளில் இதுவரை சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு மட்டுமே முதலீடுகள் வந்திருப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
12. 2022-23ஆம் ஆண்டு
* 2022-23ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 86 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
* அவற்றின் மொத்த மதிப்பு - ரூ.1.67 லட்சம் கோடி
* ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ளவை - 17 ஒப்பந்தங்கள்
* வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை - 1.50 லட்சம்
13. முதலீடுகளின் இன்றைய நிலை
* கையெழுத்திடப்பட்ட 86 ஒப்பந்தங்களில் 80 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* சிங்கப்பூர் ஐ.ஜி.எஸ்.எஸ் (ரூ.25,600 கோடி)
* ஏ.சி.எம்.இ. கிளீன் டெக் (ரூ.52,474 கோடி)
* பெட்ரோனாஸ் (ரூ.30,000 கோடி)
* க்யூபிக் பி.வி. (ரூ.8,082 கோடி) ஆகிய முதலீடுகள் இன்னும் வரவில்லை.
14. முதல்கட்ட முதலீடு செய்த 6 நிறுவனங்கள்
1. டாடா பவர்
2. சிஃபி டெக்னாலஜிஸ்
3. ஈக்வினிக்ஸ் தரவு மையம்
4. பாம் டிஜிட்டல்
5. செஞ்சுரி பிளை
6. லூகாஸ் டி.வி.எஸ்.
15. 2022 - 23ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த முதலீடுகளின் மதிப்பு ரூ.7,000 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
16. 2023: ஏப்ரல் முதல் திசம்பர் வரை
* 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கு முந்தைய 9 மாதங்களில் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.
* 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் - 25
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு - ரூ.61,791 கோடி
17. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை
* 2023ஆம் ஆண்டு விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய ஹூண்டாய் ஒப்பந்தம் செய்து கொண்டது.
* விரிவாக்கத் திட்டங்களுக்கு ஹூண்டாய் அடிக்கல் நாட்டியது. ஆனால், ரூ.500 கோடி கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை.
* உளுந்தூர்பேட்டையில் ஹை-குளோரி என்ற நிறுவனம் காலணி ஆலை அமைத்து வருகிறது.
18. 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு
* திமுக ஆட்சியின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டது.
* இந்த மாநாட்டில் மொத்தம் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு - ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி.
* மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை - 26 லட்சத்து 90 ஆயிரத்து 657.
19. முதல்கட்ட முதலீடு செய்த 3 நிறுவனங்கள்
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டவற்றில் 3 நிறுவனங்கள் முதல்கட்ட முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன.
1. வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து ஆலை
2. எல் & டி புத்தாக்க வளாகம்
3. காவேரி மருத்துவமனை
20. தொடக்கக்கட்ட பணிகளை செய்து வரும் நிறுவனங்கள்
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்ட 5 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளன.
1. செயிண்ட்கோபைன்
2. ராமகிருஷ்ணா டிட்டோகார் ரயில் வீல்ஸ்
3. டாடா கெமிக்கல்ஸ்
4. டாடா எலக்ட்ரானிக்ஸ்
5. லாங் இன் ஷூஸ் நிறுவனம்
21. பெரும் ஏமாற்றங்கள்
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒட்டுமொத்தமாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நிலையில், அவற்றில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதுவரை எந்த முதலீடும் செய்யவில்லை.
* டாடா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட முதலீடு செய்யவில்லை - 2022ஆம் ஆண்டில் உறுதியளித்திருந்த ரூ.3,000 கோடியில் ரூ.1,500 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது.
* அதானி குழுமம் உறுதியளித்திருந்த ரூ-.42,768 கோடி முதலீடு வரவில்லை.
* சிங்கப்பூர் செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.36,238 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர் முதலீட்டின் அளவு ரூ.21,340 கோடியாக குறைக்கப்பட்டது.
* செம்ப்கார்ப் பசுமை ஹைட்ரஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. முதலீடுகளும் வரவில்லை.
* ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் உறுதியளித்த ரூ.12,000 கோடி முதலீடு சாத்தியமாகவில்லை.
22. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு...
* 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு மார்ச் 31ஆம் தேதி வரை 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மதிப்பு ரூ.13,443 கோடி.
* டாடா மோட்டார்ஸ் மகிழுந்து ஆலை அமைக்க ரூ.9,000 கோடியில் ஒப்பந்தம்.
* ராணிப்பேட்டை - பனப்பாக்கத்தில் ஆலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.
23. 2024-25ஆம் ஆண்டு
* 2024-25ஆம் ஆண்டில் ரூ.39,549 கோடி மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
* இவற்றில் ஒன்றுகூட இன்றுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
24. 2025 ஏப்ரல் முதல் இன்றுவரை...
* கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 166 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
* அவற்றின் மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடி
* ரூ.4,995 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட Kaynes Circuites India Private Limited நிறுவனம் முதல்கட்டமாக ரூ.300 கோடியில் போச்சம்பள்ளியில் மின்னணு உதிரிபாக ஆலையை திறந்துள்ளது.
* ஆஸ்பயர் ஃபுட்வேர் நிறுவனம் காட்பாடியில் காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளது.
* மீதமுள்ள 164 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்வடிவம் பெறவில்லை.
25. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள்
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு இதுவரை துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளுக்குப் பயணம்.
* 7 நாடுகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 66
* அவற்றின் மூலம் உறுதியளிக்கப்பட்ட முதலீடு ரூ.34,014 கோடி
* வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47,650
26. ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை
* மொத்த தொழில் முதலீடுகளின் மதிப்பில் வெளிநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அளவு வெறும் 3% மட்டுமே.
* வெளிநாடுகளில் ரூ.34 ஆயிரம் அளவுக்கு முதலீடுகள் உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவற்றில் ஒரு பைசா கூட வரவில்லை.
27. ஏமாற்று வேலைகள்
* வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டு வருபவை தான்.
* ஜெர்மனி, இங்கிலாந்து ரூ.15,516 கோடி மதிப்புக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* அவற்றில் 89%, ரூ.13,815 கோடி முதலீட்டுக்கு உறுதியளித்தவை தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள்.
* ஜப்பான், சிங்கப்பூர் பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.1,342 கோடி மட்டுமே.
* இந்தப் பயணம் தோல்வியடைந்ததை சமாளிப்பதற்காக தமிழ்நாட்டில் மிட்சுபிஷி நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ரூ.1,891 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தையும் சேர்த்து ரூ.3,233 கோடியாக கணக்குக்காட்டியது.
28. உண்மை நிலையை விளக்கும் அமைச்சரவை ஒப்புதல்கள்
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட தொழில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் கட்டாயம் ஆகும்.
* திமுக ஆட்சியில் இதுவரை 8 அமைச்சரவைக் கூட்டங்களில் ரூ.1.56 லட்சம் கோடி முதலீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
* ஆனால், ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்துவிட்டதாக திமுக அரசு கணக்குக் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம்? அரசின் மோசடியையே காட்டுகிறது.
29. மறைக்கப்படும் உண்மைகள்
* தொழில் முதலீடுகள் குறித்த தரவுகளையும், உண்மைகளையும் திமுக அரசு திட்டமிட்டு மறைத்து வருகிறது.
* தொழில் முதலீடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் கோரி, தொழில்துறை மற்றும் வழிகாட்டி அமைப்புக்கு பா.ம.க. சார்பில் 01.09.2025ஆம் நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
* அதன்பின் கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகும் நிலையில், எந்த பதிலும் வரவில்லை.
30. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உண்மைநிலை
* நான்கரை ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட 1,059 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 40% ஏற்கெனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கானவை.
* மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் 5% மட்டுமே முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
* நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவுதான். அதாவது வெறும் 8.8% மட்டும்தான்.
....... இப்படி, பா.ம.க. தரப்பில் ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டபோதும், உடனடியாக ஆளும் கட்சியின் தரப்பில் உரிய பதில் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதையே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியபோது, மூன்று அமைச்சர்கள் அதற்கு விளக்கம் அளித்து பதில் கூறினார்கள்.
அதைப் போலவாவது, இதற்கும் அரசுத் தரப்பிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கலாம்!