தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் கவிஞர் சல்மா. 
செய்திக் கட்டுரை

தி.மு.க. எம்.பி. சீட் - சல்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

இரா. தமிழ்க்கனல்

இரண்டு மாதங்களில் காலியாக உள்ள 6 தமிழக மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்குத் தேர்தல்...!

முதல் பாய்ச்சலாக முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது, ஆளும் தி.மு.க. கூட்டணி. ஆமாம், தி.மு.க. மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியான கமல் கட்சிக்கும் ஓர் இடம் பகிர்ந்து தரப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கமல் ஹாசனைத் தவிர வேறு யார் போட்டியிடப் போகிறார்கள்? இப்போதே அவருக்கு மாநிலம் முழுவதுமிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. கூடவே கண்டபடி வசைமாரி பொழிகிறார்கள். இருக்கவே இருக்கிறது சமூக ஊடகம் என எதிர்க் கருத்தினர் கமலை செமையாக வாரிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஒத்தை சீட்டுக்காகத்தானா கமல் இவ்வளவும் செய்தீர்கள்... இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா என்கிறபடி கமலைக் கலாய்க்கும் வலைவாசிகளின் வீச்சுகள், அவற்றின் உள்ளடக்கக் கருத்துகளைத் தாண்டி, படிப்பதற்கு சுவாரசியமாய் இருக்கின்றன.

ம.நீ.ம. செயற்குழுக் கூட்டத்தில்

இதனிடையே, சென்னையில் இன்று கூடிய மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு, செயற்குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக கமல்தான் வேட்பாளர் என முடிவுசெய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கமலை ஆதரிக்குமாறு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறது, மக்கள் நீதி மையம் கட்சி.

மொத்தம் ஆறு காலியிடங்களில் நான்கு இடங்களில் தி.மு.க., அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெல்வது உறுதி எனும் நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்கள் அ.தி.மு.க. அணிக்கே என்பதிலும் மாற்றம் இல்லை. ஆனால், அ.தி.மு.க.வே 2 இடங்களையும் எடுத்துக்கொள்ளப் போகிறதா அல்லது கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஓர் இடத்தைப் பகிர்ந்துகொள்ளுமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விவகாரத்தைப் பேசிய தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த மக்களவைத் தேர்தலில் இதற்கான ஒப்பந்தமே போடப்பட்டது; தேர்தல் தேதி வந்ததும் பேசுவோம் என்றார். ஆனால் மறுநாளே இதைப்பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, அ.தி.மு.க. சார்பில் அப்படி எதுவும் அறிவித்தோமா என கேள்வி கேட்ட செய்தியாளரிடமே கேள்வியைத் திருப்பிவிட்டார்.

மீண்டும் அவரின் கருத்தைப் பற்றி மார்ச் 8ஆம் தேதி தே.மு.தி.க. தலைமையகத்தில் உலக மகளிர் நாள் விழாவன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டதுதான் தாமதம், அவர் இரு கைகளையும் கூப்பி நன்றி எனச் சொல்லி, செய்தியாளர்களைச் சந்திப்பைத் தொடங்காமலே எழுந்து சென்றுவிட்டார்.

மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், இப்போதுதானே அறிவிப்பு வந்திருக்கிறது; பொறுமை கடலினும் பெரிது; இன்னும் பொறுத்திருப்போம் என்று இரத்தினச்சுருக்கமாகக் கூறியதுடன் நிறுத்திக்கொண்டார்.

மற்றபடி, ஜனவரி 9ஆம் தேதி நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டைப் பற்றிய விவரத்தைக் கூறினார்.

இந்த நிலையில், நாளை அ.தி.மு.க. தலைமையகத்தில் உட்கட்சி ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

தே.மு.தி.க.வைத் தவிர, அ.தி.மு.க.வின் கூட்டுக்கட்சியான பா.ஜ.க.வோடு கடந்த தேர்தலில் கூட்டணி போட்ட பா.ம.க.வுக்கும் சீட் கிடைக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.க. அழுத்தம் தந்தால் அன்புமணிக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு என ஆசை தெரிவிக்கிறார்கள், பா.ம.க.வினர்.

இது ஒரு பக்கம் இருக்க, தி.மு.க. அணியில் சில மாதங்களுக்கு முன்னரே, தனக்கு மீண்டும் வாய்ப்பு தராவிட்டாலும் கூட்டணியில் தொடருவேன் எனச் சொல்லிவிட்டார், வைகோ.

கமல் தவிர, மீத மூன்று இடங்களும் தி.மு.க.வினருக்கே என உறுதியானநிலையில், வில்சனுக்கு இடம் கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை.

தொ.மு.ச. சண்முகத்துக்கு அடுத்த வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டது. மக்களவையில் கள்ளக்குறிச்சி வாய்ப்பு கிடைக்காத சிவலிங்கத்துக்கு இப்போது வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மிக அண்மையில்கூட முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டைப் பெற்ற புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்ற பேச்சு வலுவாக இருந்தது. நாடாளுமன்றக் கூட்டங்களில் பாராட்டும்படியான செயல்பாடு, வளைகுடா நாடுகளில் அவதிப்படும் தமிழர்களுக்கு உதவிசெய்வது என கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் நல்ல பெயரைச் சம்பாதித்திருந்தார், அப்துல்லா.

ஆனாலும் கட்சியில் இவரைவிட மிகவும் சீனியரான கவிஞர் சல்மாவுக்கு, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தலைநகரத்தின் பரபரப்பு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், மாவட்ட அளவில் தலைமை சொல்லும் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வது, அவ்வப்போது ஊடகங்களில் பேசுவது என தொடர்ந்து செயல்பட்டுவந்தார். ஏனோ, தலைமைக்கழகம் பக்கமோ சென்னை நிகழ்ச்சிகளிலோ சொல்லிக்கொள்ளும்படி தலைகாட்டாமல் இருந்துவந்தார்.

இந்தப் பின்னணியில் மாநிலங்களவை எம்.பி. சீட்டுக்கு இவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது, கட்சிக்குள் பல தரப்பினரிடமும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

ஆனால், “ அவர் கட்சிக்கு வருவதற்கு முன்னரே பேரூராட்சித் தலைவராக இருந்தவர். 2004ஆம் ஆண்டில் தி.மு.க.வில் சேர்ந்தவருக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் உட்கட்சி உள்ளடியில் அவரை வெல்லவிடாமல் செய்துவிட்டார்கள். ஆனாலும் சல்மாவைப் பொறுத்தவரை தலைமை கொடுத்த வேலைகளைத் தட்டாமல் செய்துவந்தார். அப்போது கலைஞர் நன்றாக இருந்த காலகட்டம். அப்போது கட்சியில் பெரிதாக வளராத கனிமொழியும் கவிஞர், நாவல் ஆசிரியராக நன்கு அறியப்பட்ட இவரும் தி.மு.க. கவிஞர்களாக நட்போடு வலம்வந்தார்கள். கலைஞரே சல்மாவுக்கு சமூக நல வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்தார். அந்த நன்றி விசுவாசத்தோடு இன்றுவரை கட்சியில் தலைமை தரும் வேலைகளைத் தட்டாமல் செய்துவருகிறார். போன தேர்தலில்கூட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலைமை சொன்னபடி கட்சிப்பணி செய்தார். பெரும் பெரும் தலைவர்கள்கூட முக்கியத்துவம் தராவிட்டால் ஒதுங்கியபடி இருந்துவிடுவார்கள். சல்மாவின் பொறுமைக்கும் தொடர் வேலைகளுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இது.” என்கிறார்கள் தி.மு.க.வின் நிர்வாகிகள் சிலர் நம்மிடம்.

வேறு ஒரு தரப்போ, “அப்படியெல்லாம் இல்லை. அப்துல்லாவுக்கு சட்டமன்ற வாய்ப்பு தரப்போகிறார்கள். பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலை வீச்சாகச் செய்யவேண்டிய அல்லது அப்படிக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை முன்னைவிட தி.மு.க.வுக்கு கூடுதலாக இருக்கிறது. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகளில்கூட இல்லாத அளவுக்குப் புகழும் பெயரும் உள்ள சல்மாவை, நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது பயனளிக்கும் என்பதால், அவருக்கு வாய்ப்பு தானாகக் கிடைத்திருக்கிறது.” என்றும் சொல்கிறார்கள்.

எப்படியோ, தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் ஒருவரும் கலைஞர் ஒருவரும் இந்த முறை மாநிலங்களவைக்குச் செல்வது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.

இவர்கள் அங்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பது இதைவிட முக்கியம்!