செய்திக் கட்டுரை

பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்- நாடளவில் என்ன நிலை?

இரா. தமிழ்க்கனல்

கோவையில் நிகழ்ந்த கொடுந்துயர- பாலியல் வன்கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதில் உண்மைக்கு மாறானது ஒன்றுமில்லை!

குறிப்பிட்ட சம்பவம் குறித்து, பல்வேறு கதைகளும் ஏராளமான கருத்துகளும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

கருத்துகள் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் வெளிப்படும் தகவல்களைப் பார்த்தால், பகீர் இரகங்கள்!

மனிதர்கள் இப்படியுமா இருக்கமுடியும் எனப் பேயறைவதைப் போலப் பேசுகிறார்கள்.

மனிதர்களின் சிந்தனையைப் போலவே செய்கைகளும் உள்ளன என்பது கசப்பான உண்மை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட்டில் சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவனின் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி, பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

”நாடளவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் மொத்த பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.” என்பதைக் குறிப்பிட்டிருந்த அவர், ”உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையும் 47.3 சதவீதமாக இருக்கிறது; தேசிய சராசரியே 28.5 சதவீதம்தான்.” என்றும் புள்ளிவிவரங்களை அடுக்கினார். இதன் காரணமாகவே, பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும் அமைச்சர் பெருமையாகக் கூறியிருந்தார்.

பத்து இலட்சம் பேர் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெண்கள் பணியாற்றுவதற்குச் சிறந்த நகரமாக 2023ஆம் ஆண்டில் சென்னை சிறந்த ஊராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, சென்ற ஆண்டு பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் இரண்டாவது ஊராக சென்னை இடம்பிடித்தது. பத்து இலட்சத்துக்கும் குறைவானோர் வசிக்கும் அடுத்தகட்ட நகரங்களில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவை பெண்களுக்கான பாதுகாப்பில் வரிசைக்கிரமமாக இடம் பிடித்தன.

கடந்த ஆண்டில், பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்தது, கோவை நகரம். அப்படிப் பெயர் எடுத்த கோயம்புத்தூர் நகரில்தான் இவ்வளவு வேதனையளிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

உள்ளபடியே, நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் 32,033 பாலிய வல்லுறவுக் கொடுமை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. கொரோனா காலத்தில் மட்டும் வல்லுறவுக் குற்றங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. 2020இல் 28,046 எனக் காட்டுகிறது, அரசாங்கத் தரவு.

2021ஆம் ஆண்டில் 31,677, 2022ஆம் ஆண்டில் 32,948, 2023ஆம் ஆண்டில் 33,174 என வல்லுறவுக் கொடுமைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பாலியல் குற்றங்களை உள்ளடக்கிய கடத்தல்களும், கொரோனா கால நாடு அடங்கு காலத்தில் மட்டும் சற்றே குறைந்து 2020இல் 84,805, 2021இல் 95,905ஆகப் பதிவாகியிருக்கிறது.

இது 2023வரையிலான ஐந்து ஆண்டுகளில், சுமார் ஒரு இலட்சம் என்கிற அளவில் பதிவாகியிருக்கிறது. முந்தைய ஆண்டை ஒப்பிட அந்த ஆண்டில் 5.6 சதவீத அளவுக்கு கடத்தல்கள் அதிகரித்துள்ளன.

இதைப்போல, மொத்தமாக அனைத்து வகைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகரித்தது. 2022இல் 4,45,256 ஆகப் பதிவான இந்தக் குற்ற சம்பவங்கள் அடுத்த ஆண்டில் 4,48,211ஆகப் பெருகியுள்ளன.

பாலிய வல்லுறவுக் கொடுமைக் குற்றங்களில், 2023ஆம் ஆண்டில் மட்டும் பதிவான விவரங்களின்படி, இராஜஸ்தான்(5,078), உத்தரப்பிரதேசம்(3,516), மத்தியப்பிரதேசம்(2,979), மகாராஷ்டிரம்(2,930) ஆகிய மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் 365 குற்றங்கள் சட்டப்படி முறையிடப்பட்டு ஆவணத்தில் ஏற்றப்பட்டுள்ளன.

அகில இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை மைய அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனாலும் இப்படியான கொடூரம் சென்னை அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலை. மாணவி, இப்போது கோவை மாணவி என மீண்டும் மீண்டும் நிகழ்கிறதே...?

’நாடளவில் ஒப்பிட நம்முடைய மாநிலத்தில் மோசமில்லை’ எனக் கருதிக்கொண்டு, இதைக் கடந்துசெல்லும் மனப்பாங்கு பொதுப்புத்தியில் இருப்பதும், அவலம் தொடர்வதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள், சமூகக் குற்றவியல் ஆய்வாளர்கள்.

மிக அண்மையில் காவல்துறை கருப்பு ஆடுகள் இரண்டு இப்படியான ஒரு வன்கொடுமையில் ஈடுபட்டதும், அந்த மனித மிருகங்களை பணியிலிருந்தே முழுவதுமாக நீக்கி தமிழக அரசு அதிரடி காட்டியது. அப்படியான நடவடிக்கைகளும் அவை தொடரும் என்கிற எச்சரிக்கையும் ஊட்டப்பட்டுக்கொண்டே இருப்பதும், பண்பாட்டுரீதியாக பாலின உரிமைகள், பாலினத் தாக்குதல், பாலினக் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் குறித்து பள்ளி வயதிலிருந்தே ஆண் பிள்ளைகளிடம் தனி பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படுவதும் இப்படியான மானுடக் குற்றங்களைக் குறைக்கக்கூடும்!