‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த்; அவரது ஆரம்ப காட்சிகள் படமாக்கப்பட்ட அடையாறில் உள்ள வீடு 
செய்திக் கட்டுரை

ரஜினி பலமுறை முயன்றும் வாங்கமுடியாத அந்த வீடு! என்ன விசேஷம்?

தா.பிரகாஷ்

‘கூலி’ திரைப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கலாம்!

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. அவர் முதன் முதலில் நடிகராக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சி நினைவிருக்கிறதா…?

8 ஆகஸ்ட் 1978இல் வெளியானது ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். நடத்துனராக இருந்து நடிகராக மாறிய ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராஜ் கெய்க்வாட். இந்த பெயரை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்தான் மாற்றினார். காரணம், ஏற்கெனவே சிவாஜி கணேசன் இருந்ததால்.

சந்திரகாந்த், ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் என்ற மூன்று பெயர்களை பாலச்சந்தர் சொல்ல, அதில் ரஜினிகாந்த் என்ற பெயர் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த படத்தில் தான் ரஜினியும் கமல்ஹாசனும் முதல் முறையாக சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில், ரஜினிக்கு சிறிய வேடம் தான் என்றாலும், க்ளைமாக்ஸில் அவரின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்ததால் அவரை ரசிகர்கள் கவனித்தனர்.

‘அபூர்வ ராகங்கள்’ படம் தொடங்கி ஒன்றரை மணி நேரம் கழித்துதான் எண்ட்ரி ஆவார் ரஜினி. ’இதுதாங்க குறியீடு…’ என்பது போல், ’கதவைத் திறந்து கொண்டு எண்ட்ரி’ கொடுக்கும் காட்சியை ரஜினிக்கு வைத்திருப்பார் பாலச்சந்தர்.

இந்த ஒரு காட்சியில் நடிக்க அன்றைய ரஜினிக்கு ஐந்து டேக்குகள் தேவைப்பட்டதாம்!

கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் ரஜினிகாந்த்

தலைவிரி கோலத்தில் மரம் ஒன்று பின்னணியில் இருக்க, கோட் அணிந்த ரஜினி, தயங்கிய முகத்துடன் கதவை திறப்பார். அந்த வீட்டின் மேல் இருக்கும் கமல்ஹாசனை பார்த்து ”பைரவி வீடு இதுதானா…? நான் பைரவியின் புருஷன்..” என்பார். திரையில் ரஜினி பேசிய முதல் வசனம் இது!

ரஜினி முதன் முதலில் நடித்த அந்த வீடு, அடையாறில் இன்னும் அப்படியே இருந்தாலும், ரஜினி தள்ளிய அந்த கேட் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டின் உரிமையாளரால் நவீனமாக மாற்றப்பட்டுவிட்டதாம்.

புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த்துக்கு இன்று போயஸ் கார்டனில் மிகப்பெரிய வீடு இருந்தாலும், அவரது நிறைவேறாத கனவுகளில் ஒன்று, தான் நடிகராக அறிமுகமான அந்த அடையார் வீட்டை வாங்க முடியாமல் போனதுதான்!

இந்த தகவலை அவர், 2018ஆம் ஆண்டு ஜீ தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருப்பார்.

“அடையாறில் உள்ள அந்த வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் அந்த வீட்டை வாங்க விரும்பினேன். அந்த வீடு விற்பனைக்கும் வந்தது, நான் வாங்குவதற்கு முன்னர் வேறு ஒருவர் வாங்கிவிட்டார்.“ என்று கூறியிருப்பார்.

1979ஆம் ஆண்டு இந்த வீட்டை வாங்கிய தற்போதைய உரிமையாளர்கள், தங்கள் வீட்டுடன் தொடர்புடைய புகழ்மிக்க சினிமா வரலாற்றை தெரிந்தே வைத்திருக்கிறார்கள். இதனால், வீட்டில் குறைந்த அளவுக்கு மாற்றங்களையே செய்துள்ளனர் அவர்கள்.

இந்த வீட்டின் முகவரி ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்தால் என்ன ஆவது…?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram