அமித்ஷா  
செய்திக் கட்டுரை

பனையூரில் டேரா போடுகிறார் அமித்ஷா? தேர்தல் வேலைக்காக மாதம் 15 நாட்கள் தங்க திட்டமாம்!

Staff Writer

தமிழக சட்டப்பேரவையில் எத்தனை கூட்டணிகள் என்பதைப் பற்றி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்தான் ஒரு ஜோதிடரைப் போல அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை, அவரிடம் இப்போது அந்தப் பேச்சைக் காணோம்!

அவர் பேசாமல் விட்ட இடைவெளியில் தமிழக காங்கிரஸ் தரப்பில் இதற்கு தூபம் போடப் பார்த்தார்கள்... இல்லை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அதிகாரபூர்வமான கருத்தாளர்கள் என இல்லாவிட்டாலும் அப்படிப் பேசியவர்கள், சும்மா ஒரு கணக்குக்கும் இல்லாத ஆள்கள் என்று ஒதுக்கிவிடவும் முடியாதவர்கள். குறிப்பாக, கரூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், ஜோதிமணி.

கரூரில் அண்மையில் ஊடகத்தவரிடம் பேசிய ஜோதிமணி, தி.மு.க. கூட்டணியை மறுக்காதபோதும், விஜய்யுடன் இணக்கமான ஒரு போக்கை வெளிப்படுத்தினார்.

விஜய் காங்கிரஸ் கட்சிக்குப் புதியவர் அல்ல என்றும் 2010ஆம் ஆண்டிலேயே அவர் இராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முயன்றவர்; ஏனோ அது நடக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

விஜய் தனிக் கட்சியை உருவாக்காத காலத்துக் கதை இது என்றாலும், ஜோதிமணி இப்போது இப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரிடையே கேள்விகள் எழுந்தன. அவை இன்னும் தொடர்கின்றன.

வழக்கமாக, மாற்று கட்சிகள் கூட்டணி பற்றியோ ஆட்சி பற்றியோ கருத்து எதையும் சொன்னால், அவர்களை உண்டு இல்லையெனப் பண்ணிவிடும் தி.மு.க. சமூக ஊடக ஆர்வலர்கள் இதில் ஜோதிமணி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் நின்றுகொண்டனர்.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை காங்கிரசுக்கு பெரிய அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாது எனக் கூறப்படும் நிலையில், அதுவும் பீகார் தேர்தல் முடிவுக்குப் பின்னர், காங்கிரஸ் விஜய்யுடன் கைகோக்கலாம் என்று பரபரப்பு எழுந்தது.

இதையொட்டி தேர்தல் அரசியலில் பரபரப்பு கூடியது.

ஏற்கெனவே, பா.ஜ.க. தரப்புடன் விஜய் இணக்கம் எனப் பேசப்பட்ட நிலையில், காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது.

எப்போதடா தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழும் எனக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல அவல் கிடைத்தது போலவும் ஆகிவிட்டது.

இந்தப் பின்னணியில், பீகார் தேர்தல் களப் பணிகளை முடித்துக்கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் நட்சத்திரம் அமித் ஷா, அடுத்த கட்டமாகத் தமிழகத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கேயே முகாமிட்டார், அமித் ஷா. போனவர் மீண்டும் அங்கு பா.ஜ.க.வை அரியணையில் ஏற்றிவிட்டுத்தான், தில்லிக்குத் திரும்பினார்.

அதே பாணியில்தான், அதன்பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அமித்ஷாவின் தேர்தல் பணியும் பாணியும் அமைந்துவருகின்றன.

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இங்கும் முகாமிடப் போகும் அவர் தங்கவுள்ள இடம்தான், இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.

வழக்கமாக, சென்னையில் விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதைப் போல, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியிலோ அரசு நிகழ்ச்சிகள் இருக்கும்பட்சத்தில் ஆளுநர் மாளிகையிலோ தங்குவது அவர் வழக்கம்.

தேர்தல் பணிகள் என்பதால் தொடர்ச்சியாக ஓர் இடத்தில் தங்குவது என இந்த முறை திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்தான் இந்த முறை அமித் ஷா தங்குகிறார் என்கின்றன தில்லி வட்டாரங்கள்.

த.வெ.க. தலைவர் விஜய்யின் பனையூர் அலுவலகம், வீடு ஆகியவற்றுக்கு அருகில்தான் இந்த விடுதி உள்ளது என்பது முக்கியமான தகவல்.

என்னதான் விஜய் பா.ஜ.க. எதிர்ப்பு வசனங்களை வீராவேசமாகப் பேசினாலும், பா.ஜ.க. கூட்டணிக்குள் அவரை இழுக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்பதை தமிழக பா.ஜ.க. தலைவர்களே பூடகமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்கும் பிரிவுகளை சரிப்படுத்தி அதை வலுவாக்குவதுதான் அவர் முதல் நோக்கமாக இருக்கும். டிசம்பரில் வரும் அதிமுக பொதுக்குழுவில் தன் எண்ணத்தை அவர் நிறைவேற்றச் செய்வார் என்பது எதிர்பார்ப்பு.

’ஜி வந்து ஒரு மாநிலத்தில் மாதம் 15 நாட்கள் தங்கினால் அங்குள்ளவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது நிச்சயம். பார்ப்போம் அவர் என்ன செய்கிறார் என்றும்... தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்றும்..’ எனச் சொல்கிறார் அரசியல் நோக்கர் ஒருவர்.