”தனியார் சூரிய மின் சக்தி திட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்.” என்று எச்சரிக்கின்றனர் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மக்கள். இந்த பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களான சீமான், டிடிவி தினகரன், வேல்முருகன் ஆகியோரும் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட பலரது கவனத்தையும் அக்கிராமம் ஈர்த்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகே உள்ளது பெருகவாழ்ந்தான் கிராமம். விவசாயத்தையே நம்பி இருக்கும் இவ்வூர் மக்களின் திடீர் கோபத்துக்கு காரணம், அந்த ஊரில் 200 ஏக்கரில் அமைய இருக்கும் தனியார் சூரிய மின் சக்தி திட்டமே ஆகும்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு வடிவங்களில் தங்களின் எதிர்ப்புகளை பெருகவாழ்ந்தான் கிராமத்து மக்கள் தெரிவித்து வரும் நிலையில், சோலார் திட்ட எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்களுல் ஒருவரான பெருகவாழ்ந்தான் கிராமவாசி சமரனிடம் பேசினோம்.
“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. எங்களின் முதன்மை வாழ்வாதாரமே விவசாயம் தான். இப்போது அதற்கு வேட்டு வைத்திருக்கிறது தனியார் சோலார் நிறுவனம்.” என ஆவேசமாக பேசத்தொடங்கியவரிடம், பிரச்னை எங்கிருந்து தொடங்கியது என்று கேட்டோம்.
“எங்கள் ஊரைச் சேர்ந்த பெருநில உரிமையாள்ர் ஒருவர் அவருடைய 100 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு குத்தகை விட்டிருந்தார். அவர்களும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள்தான். சில நாள்களுக்கு முன்னர், குத்தகைதாரர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து நிலத்தை மீட்ட அவர், அந்த நிலத்தை ஒரு தனியார் சோலார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து பக்கத்து நிலங்களைச் சேர்ந்த விவசாய நில உரிமையாளர்களும் தங்களின் நிலங்களை அதே நிறுவனத்திடம் விற்றுவிட்டனர்.
எப்போது எல்லா நிலங்களும் கைக்கு வரும் என காத்திருந்தவர்கள் போல் உடனே வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். நூற்றாண்டுகளாய் இருந்த கால்வாய்களை மூடினார்கள், கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் குளங்களுக்கு வேலி அமைத்தார்கள். வரிசையாக இருந்த 150 பனைமரங்களை வெட்டத் தொடங்கினர்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். ‘இதுவரை எந்த பனைமரமும் வெட்டவில்லை’ என பதில் அனுப்பினார்கள்.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சோலார் பிளான்ட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றினோம். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்தோம். அதே மனுவை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்தினோம். அது குறித்து கேள்விப்பட்டு, மாரிமுத்து எம்.எல்.ஏ., செல்வராஜ் எம்.பி.ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களே, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விகளுக்கும் ஆட்சியர் முறையான பதில் சொல்லவில்லை.
”பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றவரிடம் “அதுவரை சோலார் பிளாண்ட் அமைக்கும் பணிகளை நிறுத்தச் சொல்லுங்கள்” என கேட்டோம். ”நோட்டீஸ் கொடுப்பதாக” சொன்னார். ஆனால் பணிகள் வேகவேகமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு எதிர்ப்புகளைத் தெரிவித்த பிறகுதான் புறக்கணிப்பை அறிவித்துள்ளோம். எங்களுக்கும் வேறு வழிதெரியவில்லை.
இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை அவர்களிடம் சொல்லி வருகிறோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜை சந்தித்து நேற்று மனு அளித்துள்ளோம். சோலார் பிளான்டை அப்புறப்படுத்தமால் மக்கள் ஓயமாட்டார்கள்.” என்றவரிடம் சோலான் பிளாண்ட் அமைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டோம்.
“திருவாரூர் போன்ற மாவட்டங்கள் ஏற்கனேவே அதிகமான வெப்ப அழுத்தத்தில் திணறிக் கொண்டிருக்கின்றது. நீர்க்குமிழ் வெப்பநிலையும் (WBT) உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த மாநில திட்டக்குழுவின் Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and Climate Interactions in Tamil Nadu என்கிற ஆய்வு இந்த வெப்பநிலை உயர்வுக்கு சொல்லும் முக்கியமான காரணம் நிலப் பயன்பாடு மாற்றம் (Land Use Change), தாவரப் பரப்பு குறைதல்(Reduced Vegetation Cover).
அந்த ஆய்வில் எது காரணமாக சொல்லப்பட்டதோ அதுதான் எங்கள் கிராமத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. புவி வெப்பமாதலின் யுகம் முடிந்து ‘புவி கொதிக்கும்’ (global boiling) காலகட்டம் தொடங்கியிருப்பதாக, ஐ.நா. அவையும் எச்சரித்துள்ளது
இந்தநிலையில் சோலார் மின்சக்தி திட்டத்திற்கு அனைத்திலிருந்தும் விதிவிலக்கு என்று சொல்லி சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு நடத்தப்படவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்பு இல்லை. கடந்த வாரம்வரை அறுவடை நடந்த நிலங்களை உள்ளடக்கிய பகுதியில் சோலார் பேனல்கள் அமைக்க அனுமதி அளித்தது யார்? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? மாவட்ட நிர்வாகம், காவல் துறை என அனைவரும் தனியார் நிறுவனத்தின் பணியாள் போல செயல்படுவது யாருடைய அழுத்தத்தின் காரணமாக?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார் சமரன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சூரிய சக்தி ஆலை அமைப்பதா இல்லையா? வேளாண்மை செய்யப்படும் நிலமா அது? இதனால் பிரச்னைகள் ஏற்படுமா ஆகியவை குறித்து ஆராயவேண்டியது தமிழக அரசின் கடமை. இன்னொரு நெடுவாசல் போராட்டம் போன்ற ஒன்றுக்கு இது வழி வகுத்துவிடக் கூடாது என்கிறனர் கிராமவாசிகள்.