பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் 
செய்திக் கட்டுரை

அரசு கடனுக்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம்...? - சர்ச்சையான ஜெயரஞ்சன் பேச்சு!

தா.பிரகாஷ்

பொருளாதாரம் என்றாலே தலைதெறிக்க ஓடுபவர்கள் கூட ஜெ.ஜெயரஞ்சன் பேச்சை நின்று கேட்பார்கள். எல்லோருக்கும் புரியும் விதத்தில் விளக்குவதில் வல்லவர் அவர்.

திராவிட பொருளாதார அறிஞராக அறியப்படும் அவர், மத்திய - மாநில அரசுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் குறித்தும், திமுக - அதிமுக முன்னெடுத்த சமூக நலத்திட்டங்களால் தமிழ்நாடு எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை தொடர்ந்து பேசி வருகிறார்.

தற்போது அவர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, “உத்தரப் பிரதேசத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக” கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து தொடர்பாக, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தி டிபேட் (The Debate) என்ற யூ டியூப் சேனலுக்கு ஜெயரஞ்சன் அளித்திருந்த பேட்டி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

“தமிழ்நாடு அரசு உலக வங்கியில் கடன் வாங்குவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்கு என்ன சார் காரணம்?” என்று நெறியாளர் கேள்வி எழுப்புவார்.

அதற்கு, அவருக்கே உரிய பாணியில்,”நிறைய செலவு செய்கிறோம். கடன் எதற்கு குறைய வேண்டும்? அரசு வாங்கும் கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? உங்கள் அப்பா, அம்மா கடன் வாங்கியிருந்தாலே கூட உங்களுக்கு சம்பந்தம் கிடையாது. நீங்கள் கடன் வாங்கியிருந்தால் பொறுப்பேற்கலாம். அரசுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அரசு கடன் வாங்கியிருக்கிறது. அதை அரசு திருப்பி அடைக்கப்போகிறது.

வரியின் மூலம் தினமும் வருமானம் வருகிறது. அதன் மூலம் வாங்கிய கடனை அரசு திருப்பி அடைக்கிறது. வாங்கிய கடனில் அரசு என்ன செய்கிறது என்றால் மெட்ரோ ரயில் விடுகிறது, பேருந்து விடுகிறது, அணை கட்டுவார்கள்.” என்று பதில் கூறியிருப்பார் ஜெயரஞ்சன்.

அவரின் இந்த பதிலுக்கு சமூக ஊடகத்தில் காரசாரமான எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“கடந்த 2021 பிப்ரவரி 25ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மு.க.ஸ்டாலின், அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசை அதிக கடன் வாங்கும் அரசு என குற்றம் சாட்டியிருந்தார். "2011 திமுக ஆட்சி வரை மொத்தக் கடன் 1 லட்சம் கோடி ரூபாய். இப்போது அதிமுக ஆட்சியில், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளனர்.

கடன், நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, இதுதான் அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை. கடன் 500 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிமிடம் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனைச் சுமத்தியுள்ளது அதிமுக அரசு" என்று அதிமுக அரசை கடுமையாக சாடினார்.

அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும். திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அரசு வாங்கிய கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்றால், 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் அதிமுக அரசின் கடன் சுமை, ஒவ்வொருவர் தலையிலும் விழுகிறது என மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது தவறா அல்லது பொய்யா?” என்று பத்திரிகையாளர் ராகவேந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

தரவு பகுப்பாய்வாளர் அஸ்வின்குமார் என்பவர், “ஜெயரஞ்சன் அவர்கள் போன்ற திறன்மிகு பொருளியல் அறிஞர்கள் அவர்களது (Selective Morality) விருப்பம் சார்ந்த நெறிகளை மட்டும் பற்றிக் கொண்டு - உண்மையை உணர்ந்தும் முழுதாய் வெளிப்படுத்துவதில்லை. இது தேவையான உண்மையை தெரிவு செய்து வெளிப்படுத்தும் தன்மை.

அறிவாளிகள் தங்கள் தரப்பினருக்கு ஏதுவாக முழுமுதலாய் வாதிடும் பொழுது (Silent Complicity) மவுன ஒப்புதலை கடைப்பிடிக்கின்றனர் - தவறுகள் தொடர்வதற்கு இதுவே வழி வகுக்கிறது.

கற்பிப்போர் என்றுமே மக்களிடம் ஒளிவு மறைவற்ற முழுத் தகவலைப் பகிரவேண்டும் - அதில் சரி எது தவறெது என மக்கள் பகுத்தறிந்து கொள்வர். மக்கள் சார்பாய் கற்பிப்போர் அச்செயலைச் தாமாய்ச் செய்து - தகவலைப் பதுக்கக் கூடாது.

2011-12 காலகட்டத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய அண்ணா ஹசாரே அவர்கள் அதன் பின் இருக்கும் இடம் தெரிவதில்லை. அதுபோல் இது மற்றொரு வகை.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் பொருளாதார அறிவை பார்த்து வியக்கிறேன். கடன் தொகை அதிகமாக இருந்தால் நேரடி மற்றும் மறைமுக வரிகளை உயர்த்தி, வருமானத்தைப் பெருக்கி கடனை அடைக்க முயற்சிப்பார்கள்.

நேரடி மற்றும் மறைமுக வரி ஏழைகளைத்தான் அதிகம் பாதிக்கும். எனவே தமிழ்நாட்டின் கடனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள் தான்.” என்று தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும் எழுத்தாளருமான ம. வெங்கடேசன் தன்னுடைய சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் எளிமையாக பதிலளிக்கும் ஜெயரஞ்சன், கடன் சுமை விவகாரத்தில் ஏன் கடுமையாக பதிலளித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram