தனது செயல்பாட்டிற்காக லடாக்கின் எல்லைகளைத் தாண்டியும் அறியப்பட்டவர் சோனம் வாங்சுக். ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் ’மகசேசே விருதை’ பெற்றவர். அடிப்படையில் அவர் ஒரு காந்தியவாதி, கல்வியாளர். அவர், தொழில்நுட்பக் கல்வி பயின்ற அறிவியலாளர் என்றாலும் இயற்கைப்பாதுகாப்பு, தற்சார்புப் பொருளியல் மீது அதிக அக்கறை கொண்டவர்.
இன்றைய தலைமுறைக்கு அவரை எப்படி அறிமுகப்படுத்தலாம் என்றால், 2009இல் வெளியான ‘3 இடியட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தில் அமீர் கானின் கதாபாத்திரம் (Phunsukh Wangdu) சோனத்தை முன் மாதிரியாக கொண்டு எழுதப்பட்டதாகும். தமிழில் விஜய் நடித்த நண்பன் (2012) கொசக்சி பசபுகழ் பாத்திரம்.
தில்லிக்கு ஓடியவர்...
59 வயதான சோனம், லடாக்கின் லே-வுக்கு அருகேயுள்ள உலேடோக்போ (Uleytokpo) என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் ஒன்பது வயது வரை பள்ளிக்கே செல்லவில்லை. அவரது அம்மாவே அவருக்கு லடாக் மொழியில் பாடம் கற்பித்தார்.
1975 ஆம் ஆண்டு சோனத்தின் அப்பா சோனம் வாங்கால், ஜம்மு-காஷ்மீரின் அமைச்சரானதால் அவரது குடும்பம் ஸ்ரீநகருக்கு குடிபெயர்ந்தது. பின்னர், அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்ட சோனத்துக்கு ஆங்கிலமும், இந்தியும், உருதும் பாடாய்ப்படுத்தின.
நீண்டகாலத்துக்குப் பிறகு, அவர் இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,”ஸ்ரீநகரில் நான் லடாக்கைச் சேர்ந்த பையனாகவே இருந்தேன். எனக்கு இந்தி, ஆங்கிலம் பேசத் தெரியாததால் அவமானப்படுத்தப்பட்டேன்.” என்று வேதையோடு கூறியிருந்ததார்.
ஸ்ரீநகரில் படிக்க விரும்பாத அவர், தன்னுடைய பன்னிரண்டு வயதில் தனியாக தில்லிக்கு ஓடிப்போனார். அங்குள்ள ’விஷேஷ் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரிடம் கெஞ்சிக் கூத்தாடி மீண்டும் பள்ளியில் சேர்ந்துப் படித்தார்.
பின்னர், ஸ்ரீநரில் உள்ள என்ஐடியில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். 1988இல் தனது கல்லூரி படிப்பை முடித்த சோனம், தனது சகோதரர்கள் உட்பட ஐந்து பேருடன் சேர்ந்து லடாக்கிய மாணவர்கள் கல்வி, கலாச்சார இயக்கம் (Student’s Educational and Cultural Movement of Ladakh - SECMOL) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1994 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து, ‘புதிய நம்பிக்கை’ (Operation New Hope) என்னும் ஒரு பள்ளிக் கல்வித் திட்டத்தைத் தொங்கினார். அதன் மூலம் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் லடாக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின.
உயர்கல்விக்கு மாணவர்களை தயார்ப்படுத்த உருது மொழியை விட ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளித்ததோடு, தாய்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
அதேபோல், லடாக் மக்கள் எதிர்கொண்ட தண்ணீர் பிரச்னையை ‘பனி ஸ்தூபி’(Ice Stupa project) என்ற திட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். இதே திட்டத்தை ஸ்விட்சர்லாந்த் நாட்டின் அழைப்பின் பேரில், அங்கு சென்றும் பனி ஸ்தூபியை உருவாக்கி விருது வாங்கினார்.
மாநில அந்தஸ்து போராட்டம்
2019இல், மோடி அரசாங்கம் இந்திய அரசியலமைப்பின் கீழ் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும் மாநில அந்தஸ்தையும் நீக்கியது.
பின்னர், மோடி அரசாங்கம் மாநிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. சட்டமன்றம் கொண்ட ஜம்மு-காஷ்மீர், சட்டமன்றம் இல்லாத லடாக். இரண்டுமே மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. இதனால் லடாக் அதிகாரம் அற்ற பகுதியாக உள்ளூர் மக்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், லடாக்கை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளாக அம்மக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே, கடந்த 2023 ஆம் ஆண்டு, காலநிலை மாற்றத்தால் லடாக்கின் சுற்றுச்சூழல் பாதிப்பை எடுத்துரைக்கவும், லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் சோனம். உடனே அவரை கைது செய்த வீட்டு சிறையில் அடைத்தது காவல் துறை.
பின்னர், இதே கோரிகையை வலியுறுத்தி அவர் டெல்லி வரை நடைப்பயணமும் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 10 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 35 நாள் போராட்டத்துக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அமைதியான போராட்டங்களில் ஏமாற்றமடைந்த இளைஞர் குழுக்கள் (ஜென் சி தலைமுறை) அத்தகைய போராட்டங்களிலிருந்து விலகி செப். 24ஆம் தேதி வன்முறையில் குதித்தனர். இதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
“இந்த போராட்டம் ஜென் சி தலைமுறையின் புரட்சி. இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக வேலையில்லை. இதுவே அமைதியின்மைக்குக் காரணம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். இல்லையெனில், இது நம்முடைய ஐந்தாண்டு கால போராட்டத்தை பயனற்றதாக்கி விடும். வன்முறை நம்முடைய பாதை அல்ல.” என்றார் சோனம்.
சோனம் வாங்ச்சுக் கைது
மத்திய உள்துறை அமைச்சகம் சோனத்தின் வெறுப்பு பேச்சுகள் தான் இளைஞர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி வன்முறைக்குத் தூண்டியது என்றது. இதனால், அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது (செப்.26) செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் நடத்தி வரும் கல்வி அமைப்புக்கு வெளிநாடு நிதியுதவி பெறும் உரிமத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல் சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
லடாக் மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில் செயல்பட்டு வந்த சோனம் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கின்றனர் ஜனநாயக நம்பிக்கையாளர்கள்.