செய்திக் கட்டுரை

பெங்களூர்- கேரளம்... இடம்பெயருமா ஐடி நிறுவனங்கள்?

Staff Writer

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக இருக்கும் பெங்களூரில் பல்வேறு உட்கட்டமைப்புப் பிரச்னைகள் இருப்பதாகப் புகார்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மூச்சுத் திணறச் செய்யும் நகரங்களிலிருந்து கேரளத்துக்கு வந்து அலுவலகங்களை அமைக்குமாறு அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி. இரஜீவ் தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் சாலைகள் படுமோசமாக இருப்பதாகவும் அரசாங்கம் சுத்தமாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை என்றும் இதனால் தொழிற்சாலைகள் பக்கத்து மாநிலங்களுக்கு இடம் மாற்றிச் செல்லத் தொடங்கிவிட்டதாகவும் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சருமான எச்.டி. குமாரசாமி விமர்சனம் வைத்துள்ளார்.

அண்மையில், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாக் பக் என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நகரின் வெளிவட்டச் சாலையின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று பகிரங்கமாக விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் இப்படிச் சொன்னதுதான் தாமதம் எனப் பிடித்துக்கொண்டதைப் போல, ஆந்திரப்பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் அந்த நிறுவனத்தைத் தங்கள் மாநிலத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, நாரா லோகேசின் தந்தை சந்திரபாபு நாயுடு பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ஐதராபாத்தை தகவல் நுட்ப மையமாக உருவாக்கினார். அங்கிருந்து ஏராளமான தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்குச் சென்று மென்பொருள் துறையில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இந்த நிலையில், நாராவின் வேண்டுகோளுக்கு தகவல்நுட்ப நிறுவனங்கள் கவனம்செலுத்த வாய்ப்புள்ளது.

இதையொட்டி நாமும் ஒரு கல்லைப் போட்டு வைப்போமே என்று கேரள தொழில் துறை அமைச்சரும் பெங்களூர் தகவல்நுட்ப நிறுவனங்களுக்கு விடுத்த வேண்டுகோளில், நெரிசலான மாநகரங்களை விட்டுவிட்டு கடற்கரை மாநிலமான கேரளத்துக்கு தொழிலை விரிவாக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள், மெட்ரோ இரயில், உளாட்டு நீர்வழிப் போக்குவரத்து, நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள், உரிய போக்குவரத்து, வர்த்தகப் பயண வசதிகள், பொருட்கள் கொண்டுசெல்வதற்கான இணைப்பு வசதிகள் எல்லாம் கேரளத்தில் சிறப்பாக இருக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த நகரம் என்பதை அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

கேரளத்தில் தொழில்திறன் மேம்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 172 சதவீதத்துக்கும் கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது என லின்கிடுயின் டேலண்ட் இன்சைட்ஸ் எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் திறன்மிகு பணியாளர்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர்.

இப்படி வெளியே போனவர்கள் பெருமளவில் கேரளத்துக்கே திரும்புவதற்குக் காரணம், பெரிய வாய்ப்புகள் இங்கு கிடைக்கத் தொடங்கியதுதான் என்கிறார் பி. இரஜீவ்.

அதாவது, உலக அளவிலான நிறுவனங்கள் கேரளத்தில் அலுவலகங்களை அமைப்பதும் அரசாங்கத் தரப்பில் தொழில்துறை, தொழில்நுட்பத் துறை கட்டமைப்புகளை உருவாக்குவதும் முக்கிய அம்சங்கள்.

அண்மையில் நடைபெற்ற இன்வெஸ்ட் கேரளா மாநாட்டில் கலந்துகொண்ட 400 நிறுவனங்கள் அங்கு மொத்தம் 1.75 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. அதில் கால் பகுதி நிறுவனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியோ அல்லது தொடக்ககட்ட வேலையிலோ இருக்கின்றன என விவரித்துள்ளார், இரஜீவ்.

தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்பப் பூங்கா முதல் கொல்லம்வரையிலும், எர்ணாகுளம் தகவல்நுட்பப் பூங்கா முதல் கொராட்டிவரையிலும், மற்றொன்று அதே பூங்காவிலிருந்து சேர்தாலாவரையிலும், கோழிக்கோடு சைபர் பூங்கா முதல் கண்ணூர்வரையிலும் என புதிதாக நான்கு உத்தேச தகவல்நுட்பத் தொழில்வலையங்கள் மூலம் மேலும் வட்டாரப் பிணைப்பு உறுதிபடும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

இத்துடன், காக்கநாடு மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையம் போன்ற சிறப்பு மண்டலங்களும் உள்ளன எனப் பட்டியலிடுகிறார், இரஜீவ்.

இவ்வளவு பேசிய இவர், கடந்த ஆண்டு இப்படித்தான் வேண்டுகோள் விடுத்து பெங்களூர் தகவல்நுட்ப நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், பெங்களூர் நகரம் தண்ணீர்ப் பஞ்சத்தால் கடும் நெருக்கடியில் அவதிப்பட்டதைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு கர்நாடகத் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன என்பதும் நினைவிருக்கலாம்.