ஏ.ஐ. படம்
செய்திக் கட்டுரை

இல்லத்தரசிகளை மாறி மாறி கூல் செய்யும் திமுக, அதிமுக….. வாக்கு யாருக்கு?  

முத்துமாறன்

இது இல்லத்தரசிகளின் காலம் என்று சொல்லலாமா? அதிமுக திமுக இரண்டு  கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன. இரண்டிலுமே மகளிரைக் குறிவைக்கும் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அம்சங்கள் இடம்பெற்றன. அதில் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது ‘ இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதன பெட்டி விலை இல்லாமல் வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியாகும். வீட்டுக்குவீடு ப்ரிட்ஜ் வழங்கும் திட்டம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் எந்த சைஸ் அளவில் இந்த பிரிட்ஜ் வழங்கப்படும். ஒரு கதவு கொண்டதா, இரு கதவு கொண்டதா என்ற கேள்விக்கு மினி ப்ரிட்ஜுப்பா என்று பதில் வந்தது.

திமுக மட்டும் சும்மா இருக்குமா? அதன் தேர்தல் அறிக்கையும் இல்லத்தரசிகளைக் குளிர்வித்துள்ளது.  “இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்கு தேவையான வாசிங்மெசின், டிவி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்களை வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தும் இத்தகைய பொருள்களை மாற்றவோ இல்லத்தரசிகள் கூப்பன் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினருக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்” என்றது அதன் அறிக்கை.

ஏற்கெனவே 2021 தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மகளிர் உரிமைத் தொகை மகளிரைக் குறிவைத்து திமுக அரசால் கொடுக்கப்பட்டது. 1.31 கோடிப் பெண்கள் கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த பணம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக அறிக்கை கூறுகிறது. இதையே அதிமுக அறிக்கை குலவிளக்கு திட்டம் எனச் சொல்லி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2000 வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ளது.

வரிச்சுமையை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்குவோம் என அதிமுக தேர்தல் அறிக்கை கூறியது. ஆனால் எப்போது கொடுப்போம் எனச் சொல்லவில்லை. இதையும் இல்லத்தரசிகள் கணக்கில் வரவு வைப்போம் எனச் சொல்லி இருந்திருக்கலாம்! ஏற்கெனவே கோடைச் செலவினங்களுக்காக மகளிருக்கு திமுக அரசு  2000 ரூபாய் வழங்கியது நினைவில் இருக்கலாம்!

மகளிருக்காக கட்டணமில்லாத பேருந்துப் பயணம் ஏற்கெனவே திமுக அரசால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதற்கு ஒருபடி மேலே போன அதிமுக தேர்தல் அறிக்கை ஆண்களுக்கு கட்டணமில்லாத பேருந்துப் பயணம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது! (நீங்களாச்சும் ஆண்கள் என்று ஒரு இனம் இருப்பதை நினைவில் வெச்சிருக்கீங்களே…)

இரு தேர்தல் அறிக்கைகளுமே தற்போது இருக்கும் சமூக நலத்திட்டப் பணப்பலன்களை உயர்த்தியே அறிவித்துள்ளன எனலாம். நெல்லுக்கு இருவருமே ஒரே மாதிரி குவிண்டாலுக்கு 3500 ரூபாய் உயர்த்தப்படும் என்றுள்ளனர். அதேபோல் கரும்பு கொள்முதலுக்கு 4500 ரூபாய் என்றுள்ளனர்.  விவசாயிகள் என்று வரும்போது படு எச்சரிக்கையாக இருகட்சிகளுமே ஒரே மாதிரி விலை நிர்ணயித்துள்ளதைப் பார்க்கமுடிகிறது!

2006-இல் விலையில்லாத அரிசி, கலர் டிவி என திமுக தொடங்கியது. 2011-இல் தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டி மானியம் என அதிமுக அறிவித்தது. இப்போது பிரிட்ஜ் போன்ற பொருட்களில் வந்து நிற்கிறது!

இல்லத்தரசிகளைப் பகைத்துக்கொண்டு யாரும் எங்கும் எதுவுமே செய்யமுடியாது என்பது உலக நியதி. இவர்களைக் கூல் செய்யாமல் அரசியல் நடத்தமுடியாது என்ற நிலைக்கு இரு பெரிய கட்சிகளுமே வந்துவிட்டன! இல்லத்தரசிகளே ஏதோ பார்த்து செய்ய்ய்ங்க….!