செய்திக் கட்டுரை

அடுத்த 5 ஆண்டுகளில்... சியோமி ஓனரின் கனவும் ஆரூடமும்!

Staff Writer

உற்பத்தித் துறையின் வருங்காலம் குறித்து சீனாவின் பிரபல சியோமி நிறுவனத்தின் உரிமையாளர் லீ ஜுன் அழுத்தமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் மூலம் பெரும் பாய்ச்சல் மாற்றம் உண்டாகும் என்பது அவரின் உறுதியான கணிப்பு.

பீஜிங் டெய்லி சீன நாளேட்டுக்கு இதுதொடர்பாக அவர் விரிவான பேட்டி அளித்திருக்கிறார்.

இது மெல்லமெல்ல வரும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவர். மிக விரைவாக புதிய மாற்றங்கள் வரும் என்பது அவரின் திடமான நம்பிக்கை.

லீயின் இந்தக் கருத்துகள், சீனத்தின் அதிநவீன, வருங்கால உற்பத்தித் துறை மாற்றக் கொள்கையை ஒட்டியதாகவே அமைந்திருக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி மாடல்களில் புதுமையையும் நவீனத்தையும் கொண்டுவருவதற்கு, திறம்பட்ட, அதிநவீன செயல்முறைகளை உருவாக்குவதற்கு சீனத்து நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.

மாற்றத்துக்கு எடுப்பான உதாரணமாக, சியோமி நிறுவனம் நடத்திவரும் மின்சார வாகன உற்பத்தி ஆலையைச் சொல்கிறார்.

அங்கு நிகழ்ந்துவரும் நிலைமாறுகட்ட மாற்றங்கள் முன்னேறியபடி உள்ளது என்கிறார்.

கார்களில் பெரும்பாலும் உலோக வார்ப்பு (டை கேஸ்டிங்) மூலம் உருவாக்கப்படும் உதிரி பாகங்கள் முக்கியமானவையாக இருக்கும். அவற்றைச் சரியாக உருவாக்கி பொருத்துவதுதான் வாகனத்தை உருவாக்குவது என்பதன் அடிப்படை. அதற்கு மேல் கூடுதலாக பூச்சுகள், வசதிகள் போன்றவையெல்லாம் எளிதாகக் கையாளக்கூடிய விசயங்கள்.

அதில், பெரும் பெரும் வார்ப்புகளில் ஏதாவது குறை, ஓட்டைகள் இருக்கின்றனவா எனப் பார்ப்பதில், இப்போதுவரை மனிதர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதில் வேலை மெதுவாகவும் அடிக்கடி தவறுகளும் ஏற்படவும் செய்கின்றன.

இந்த வேலையில் இப்போது சியோமி நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தியிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட எக்ஸ்ரே கருவியைப் புதிதாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இரண்டு வினாடிகளில் மொத்தமாக வார்ப்புகள் இணைப்பு, தயாரிப்பின் சரித்தன்மை பரிசோதனைகளையும் இது முடித்துவிடுகிறதாம்!

ஒரு பணியாளர் வேலைசெய்யும் நேரத்தைவிட பத்து மடங்கு விரைவாகவும், ஐந்து மடங்கு துல்லியமாகவும் புதிய செயல்முறை இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

உற்பத்தித் தொழிற்சாலைகளில் நுண்ணறிவு அமைப்புகள் எந்த அளவுக்கு திறத்தைக் கூட்டியிருக்கின்றன என்பதற்கு இது பளிச்சிடும் உதாரணம் என்கிறார் லீ. இது மட்டுமல்ல, நம் நாட்டில் சொல்கிறார்களே டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று, இதைப்போல, சீன நாட்டிலும் டிரில்லியன் யுவான்( அந்த நாட்டு நாணயம்) அளவுக்கு சந்தையை வளர்க்கும் பாய்ச்சலுக்கு அறிகுறியாகவும் இது இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.

எந்த தனிப்பட்ட நிறுவனமும் இந்த சந்தையை உருவாக்கிவிட முடியாது என்பதிலும் அவர் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். அதற்குப் பதிலாக, உற்பத்தித் துறையில் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டும் பொறியியல் தளத்தைப் பகிர்ந்துகொள்வதும் நீண்ட கால நோக்கிலான வளர்ச்சியை உண்டாக்கும் என்பதே!

சியோமி ஆலைகளில் எந்திரன்கள்

சியோமி நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் மனித உருவ எந்திரன்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் லீ தெரிவித்துள்ளார். இந்த எந்திரன்கள் தற்போது பணியாளர்கள் செய்யும் வேலைகளை வருங்காலத்தில் செய்யும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பணியாளர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளோ மிகவும் துல்லியமாகச் செய்யவேண்டிய கட்டங்களையோ இவை செய்யும். ஆட்டோமேசன் எனப்படும் தானாக்கத்தின் மூலமாகப் பெறப்படும் பலன்களில் இது முக்கியமானது.

தொழிற்சாலைகளில் வரவுள்ள இந்த எந்திரன்கள் முதல் படிதான் என இக்கன்னா வைக்கும் லீ, வீடுகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான எந்திரன்களை உருவாக்குவதுதான் அதாவது பெரிய சந்தையை அது உருவாக்கும் என தன் பெரிய கனவையும் வெளிப்படுத்துகிறார்.

அதேசமயம், தொழிற்சாலை எந்திரன்களைவிட வீட்டு எந்திரன்கள் அன்றாடச் செயல்பாடுகளில் சிக்கல்களை எதிர்நோக்குவதுடன், அதிக திறன் படைத்தவையாகவும் இருக்கவேண்டும்.

சியோமியைப் பொறுத்தவரை ஏற்கெனவே எந்திரன்களை உருவாக்கியதில் அனுபவம் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்கிய சைபர் ஒன் என்கிற மனித உருவ எந்திரன் 2022ஆம் ஆண்டில் தொழில்நுட்ப விளக்கத்துக்காகக் காண்பிக்கப்பட்டதுதான். அப்போதிருந்தே சியோமி நிறுவனத்தில் மின்சார வாகனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, எந்திரன்கள் மேம்பாடு, திறம்பட்ட எந்திர அமைப்புகள் ஆகிய பிரிவுகளில் பொறியியல் குழுக்களை விரிவுபடுத்திவருகிறார்கள்.

மொத்த சியோமி நிறுவனமே எந்திரன்கள், வருங்கால உற்பத்தி செயல் உத்திகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறபடி இப்போதே செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியிலும் நடைமுறை பொறியியல் இலாபங்களைத் தருகிறது, இந்த நுண்ணறிவு உற்பத்தி முறைமை. செய்யறிவு நுட்பத்தின் மூலமான பரிசோதனை மனிதத் தவறுகளைக் குறைக்கவும் துல்லியத் தன்மையை மேம்படுத்தவும் செய்கிறது எனப் பட்டியலிடுகிறார் லீ.

உற்பத்தியில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதுடன், திடமான வழங்கல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. இதன்மூலம் அவர்கள் வழங்கல் செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் அதி துல்லியமான தரத்தின் மீது கவனம்செலுத்தவும் முடிகிறது.

மேலும், பணியாளர்களை திட்டமிடுதல், வடிவமைப்பு, பொறியியல் மேம்பாடு ஆகியவற்றில் மேம்பட்ட பணிகளைச் செய்யும்வகையில் அவர்களை விடுவிக்கிறது என்றும் சொல்கிறார் லீ ஜுன்.

உடல் உழைப்புப் பணியை மனித உருவ எந்திரன்கள் எடுத்துக்கொண்டால், படைப்பாக்கம், தொழில்நுட்பரீதியிலான முடிவுகளை எடுப்பது ஆகியவற்றில் பணியாளர்களை ஈடுபடுத்த முடியும் எனக் கருதுகிறார்.

பீஜிங் நகரத் தொழில்துறை குறைந்த சம்பளத்துக்கான தனது பழைய தொழில் மாடல்களை விட்டுவிட்டு, புதிய மேம்பட்ட உற்பத்தி முறைமைக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்துகிறார்.

தொழில்துறைப் போட்டியை வலுப்படுத்துவதற்காக, அடுத்த தலைமுறை தொழில் முறைமைகள், ஆட்டோமேசன் எனப்படும் தானாக்கம், டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றில் முதலீடுகளைச் செய்யவேண்டும் என அவர் ஊக்கமூட்டுகிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் மிகவும் தீர்மானகரமானவையாக இருக்கும் என்பது லீயின் நம்பிக்கை. மனித உருவ எந்திரன்கள், பரிசோதனை செய்யறிவு நுட்பம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலை அமைப்புகள் ஆகியவை, சியோமி குழுமத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என அழுத்தமாகச் சொல்கிறார்.