தமிழகத்தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து, வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, வாக்காளர் தீவிரத் திருத்தத்துக்கு முன்னர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நிலவரப்படி 6,41,14,587 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இப்போது, நீக்கத்துக்குப் பின்னர், 5,43,76,755 வாக்காளர்களே பட்டியலில் உள்ளனர்.
இறந்துபோனதாக 26, 94, 672 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் 4.2 சதவீதம்.
ஏற்கெனவே இருந்த முகவரியில் இல்லை என்கிற காரணத்துக்காக 66,44,881 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது, 10.36 சதவீதம் ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவுசெய்திருந்த 3 இலட்சத்து 39 ஆயிரத்து 278 பேரின் அப்பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. 0.62 சதவீதம் பேர் இப்படி நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் 84.81 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
பணியில் பங்கேற்றவர்கள்
மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள 68ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகளில், தொகுதிக்கு ஒருவர் என 234 தேர்தல் அதிகாரிகள், 776 உதவி தேர்தல் அதிகாரிகள், 68,467 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஆகியோருடன், 48,873 தன்னார்வலர்களும் வாக்காளர் தீவிரத் திருத்தப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் பன்னிரண்டு அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைவர் முதலிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் 2,46,069 பேரும் இந்தப் பணியில் பங்குகொண்டனர்.
ஜனவரி18வரை கெடு
பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தங்கள் முறையீடுகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை அதற்குரிய காரணங்களுடன் குறிப்பிட்டபடி அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நகர, ஊரக உள்ளாட்சி அலுவலரின் அலுவலகத்திலும் ஒட்டவேண்டும். இந்தப் பட்டியல் அனைத்தும் மாவட்ட, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வாக்காளர் அணுகும்படியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு
முறைப்பாடுகளுக்கு பதில் கிடைக்காவிட்டால், குறிப்பிட்ட வாக்காளர் மாவட்ட நடுவரிடம் முதலிலும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அடுத்தகட்டமாகவும் மேல்முறையீடு செய்ய வாக்காளர் தீவிரத் திருத்த வழிமுறை 5(ஆ) படி உரிமை உள்ளது என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.