கடல் காற்றாலை மின்சாரம் 
செய்திக் கட்டுரை

டிரம்ப் செய்த வினையால் டென்மார்க் கம்பெனி செய்த காரியம்!

Staff Writer

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்தே சிக்கல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.. அவருக்கல்ல, மற்றவர்களுக்கு!

மற்ற நாடுகளுக்கும்கூட என்றும் சொல்லலாம். 

டிரம்பின் வரிவிதிப்பு முறை மாற்றத்தால் அந்த நாட்டில் தொழில்செய்யும் மற்ற பல நாடுகளின் நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து அடிமேல் அடியாக விழுந்துகொண்டு இருக்கிறது. 

இதில் உலகின் மிகப் பெரிய காற்றாலை மின்சார நிறுவனமான- டென்மார்க்கின் ஆர்ஸ்டெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த பத்தாண்டுகளில் தன்னுடைய வர்த்தகத்தை குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் விரைவாக விரிவாக்கம் செய்தபடி இருந்தது.

வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் பல கடல் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனால், அகலக் கால் வைத்துவிட்டு அதற்கேற்ற பலன்கள் கிடைக்கவில்லை என நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் மரபுசாரா எரிசக்தித் துறைக்கு அளித்த சலுகைகளைக் குறைத்ததன் மூலம், ஆர்ஸ்டட் நிறுவனத்தின் திட்டங்களுக்குப் பின்னடைவு உருவானது.

இதன் காரணமாக, உலக அளவிலான அதன் விநியோகம் பாதிக்கப்பட்டது; செலுத்த வேண்டிய வட்டிவீதம் அதிகரித்தது; திட்டங்கள் தாமதமானதன் காரணமாக ஆர்ஸ்டெட்டின் பங்குகள் விற்பனை சரிந்தது.

இந்தப் பின்னணியில் போட்டியைச் சமாளிக்கும் வகையில் பணியாளர் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய ஆர்ஸ்டெட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த வாரம் ஆர்ஸ்டெட்டின் 940 கோடி டாலர் அளவுக்கு சலுகை விலையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, கணிசமான நிதி திரட்டப்பட்டது. ஆனாலும் அதையும்மீறி 31.13 கோடி டாலர் அளவுக்கு ஆண்டுச் செலவைக் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்தது.

இதற்காக, தற்போதைய பணியாளர்களின் எண்ணிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கால் பங்கு அளவினராகக் குறைப்பது என்று ஆர்ஸ்டெட் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மொத்த ஊழியர்களில் 2 ஆயிரம் பேர் வேலையை இழப்பார்கள்; அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளர் இழப்பீட்டுச் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை, வாழ்வாதாரச் சமாளிப்புத் தொகையையும் அளிக்க வேண்டியிருக்கும்.

ஆனாலும், இந்த முடிவின் மூலமாக 2028ஆம் ஆண்டு முதல் 31 கோடி டாலர் அளவுக்கு வருடாந்திர செலவைக் குறைக்கமுடியும் என்பது ஆர்ஸ்டெட் நிர்வாகத்தின் கணக்கு. அதாவது, அந்த நாட்டின் நாணய மதிப்பில் 200 கோடி கிரௌன் ஆண்டுக்கு சேமிப்பு ஆகும்.

என்றாலும், இதற்கான எதிர்வினைகள் அவ்வளவு சாதாரணமாக இருக்கப் போவதில்லை என்பதையும் மின்சக்தி தொழில் துறையினர் எச்சரிக்கையுடன் கூறுகின்றனர். இவ்வளவு பெரும் சவாலான சூழலை அந்த நிறுவனம் எப்படி எதிர்கொண்டு தொடர்ந்து சந்தையில் தன்னை நிறுத்திக்கொள்ளும் என்பது கேள்வியாகவே நிற்கிறது.