நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வசித்துவந்தவர், இராஜ்குமார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்துவந்தார்.
ஓய்வுபெற்ற படை வீரரான இவர், பெற்றோரை இழந்தவர். திருமணம் செய்து தன் இணையரை விட்டுப் பிரிந்து மேல்கொட்டரகண்டியில் தனியாக வசித்து வந்தார்.
சில நாள்களாகவே இவரின் நடமாட்டம் இல்லாமல் இருந்தநிலையில், இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மஞ்சூர் காவல்நிலையத்தினருக்குத் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டச்செயலாளர் சாவுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து மஞ்சூர் காவல்நிலையத்தினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.