பிரேமலதா 
செய்திகள்

“எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது” – பிரேமலதா

Staff Writer

எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் நாங்கள் ஒரு அரசியல் கட்சி. எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த். எனவே மற்றொரு கட்சி விஜயகாந்தின் புகைப்படத்தை என்றைக்கும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சட்டம் - ஒழுங்கை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இதைச் சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.