செய்திகள்

சுழலில் மிரட்டிய நூர்… கடைசி ஓவரில் தோனி – சிஎஸ்கே முதல் வெற்றி!

Staff Writer

நடப்பு ஐபிஎல் தொடரின் 3ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் திரட்டினர்.

எனினும், கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டிய சென்னை அணியின் முன்னாள் வீரரும் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் தீபக் சாஹர் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 28 ரன்களை எடுக்க, மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.

சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3, நாதன் எல்லீஸ் 1, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

சென்னை அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ள ரச்சின் ரவீந்திரா 65 ரன்களுடன் களத்தில் நின்று வெற்றியை தேடித் தந்தார்.

சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 53 ரன்கள் திரட்டி எதிரணியை மிரட்டினார். எனினும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஜடேஜா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆட்டத்தில் கடைசியில் லேசான பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசியாக, 19-ஆவது ஓவரில் தோனி களத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவானது. இறுதியாக கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு சிஎஸ்கே வெற்றி இலக்கை எட்ட உதவினார் ரச்சின் ரவீந்திரா.

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் திரட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.