''கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை.” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார்.
தற்போது, கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை.
இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இளைஞர்கள் திடீர் மரணம் அடைவது குறித்து, புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து ஆய்வு நடத்தியது. மரபியல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என்பது தெரியவந்தது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.