தேவேந்திர பட்னாவிஸ் 
செய்திகள்

இந்திக்கு எதிர்ப்பு: மும்மொழி கொள்கையை திரும்ப பெற்ற மராட்டிய பாஜக அரசு!

Staff Writer

பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் இரண்டு அரசாணைகளை மராட்டிய மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்தது. இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் இரண்டு அரசாணைகளை மராட்டிய மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே மராட்டிய அரசை கண்டித்து வரும் ஜூலை 5ஆம் தேதி உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.