செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: தங்கையை ஆணவக்கொலை செய்த அண்ணன்!

Staff Writer

பல்லடம் அருகே, வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்தால் தங்கையை அண்ணன் ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வித்யா(22). கல்லூரி மாணவியான இவர் வெண்மணி என்பவரை காதலித்து வந்த நிலையில், அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் வித்யா உயிரிழந்து கிடந்தார்.

வித்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது காதலர் வெண்மணி, வி.ஏ.ஓ. பூங்கொடி காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழு உடற்கூராய்வு மேற்கொண்டது.

அதில், வித்யாவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியது போல் பெரிய காயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் வித்யாவின் தந்தை தண்டபாணி, அண்ணன் சரவணனை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வருகின்றனர்.

இதில், தனது தங்கையிடம் பலமுறை காதலை கைவிடுமாறு தெரிவித்த நிலையில், அவர் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததை வித்யாவின் அண்ணன் சரவணன் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து போலீசார் வித்யாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு, வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வித்யா ஆணவப்படுகொலை செய்யப்படவில்லை என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார். காதலை கைவிட மறுத்து பேசியதால், வித்யாவை அவரது அண்ணன் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொல்லிய வித்யாவின் அண்ணன் சரவணன் இதற்காக தங்கையுடன் இரண்டு மாதங்களாக அவருடன் பேசாமல் இருந்துள்ளார் என்றும் எஸ்.பி கூறியுள்ளார்.