செய்திகள்

பாக். நகரங்கள் மீது தாக்குதல்… சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்... இந்தியா அதிரடி!

Staff Writer

பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்கள் மீது இந்திய ராணுவத்தினர் விடிய விடிய தாக்குதல் நடத்தியதோடு, பாகிஸ்தானின் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு முதல் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், இந்திய ராணுவத்தினர் அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர்.

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியிலிருந்து இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு இந்திய ராணுவத்தினர் தாக்குதலை தொடங்கினர்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்தியது.

ராணுவம் மற்றும் விமானப் படையுடன் சேர்ந்து கராச்சி பகுதியில் கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில், துறைமுகப் பகுதிகள் அழிக்கப்பட்டதாகவும், விமானப் படை தாக்குதலில் லாகூரில் ஐஎஸ்ஐ அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையோரத்தில் தற்காப்பு தாக்குதலிலும், பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலிலும் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இதுவரை 8 ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு மீது ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜேஎஃப்-17 விமானங்கள் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். எல்லையிலுள்ள விடுதி மற்றும் உணவகத்தின் மீது பாகிஸ்தான் ராணும் வீசிய குண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களுக்கு பீரங்கிகள் மூலம் ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு விரைகிறார். இதேபோன்று முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.