செய்திகள்

அத்துமீறிய பாகிஸ்தான்… பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு!

Staff Writer

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள நேற்று மாலை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

‘இந்த சண்டை நிறுத்த மீறலை நிறுத்த பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு இரவு தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

கடந்த நான்கு நாள்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டன. அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இருநாடுகளும் சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.

இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையையொட்டிய மாநிலங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலைத் தொடா்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, எல்லை மாநிலங்கள் மீண்டும் இருளில் மூழ்கின. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.

தாக்குதல் குறித்த விடியோவை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முன்னதாக, அவா் வெளியிட்ட பதிவில், ‘சண்டை நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகா் முழுவதும் வெடிச் சப்தம் கேட்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானின் அத்துமீறலை உறுதிப்படுத்தி வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘புரிந்துணர்வை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தருகிறது’ என்றார்.