செய்திகள்

‘ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம்’

Staff Writer

ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதாக பாமக அரசியல் குழுத்தலைவர் தீரன் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார் அன்புமணி.

தொடர்ந்து இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருப்பதாக பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் பேட்டி அளித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஐயா கவனிக்க சொல்லி இருக்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்தார்.

ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ் கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.