அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்துவார் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்தி வைப்பார். மத்திய பாஜக அரசின் ஒன்பதாவது ஆண்டு ஆட்சி நிறைவடைவதை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு இறுதியில் 21 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்படும் எனவும், விழா தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளை அமைச்சர்கள் கண்காணிபார்கள் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஏற்கெனவே பிரதமர் கோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்த அறிவிப்பு அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.