பாமக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸே செயல்படுவார் எனவும், வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ராமதாசுக்கே முழு அதிகாரம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ் அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும், கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார்
அதேவேளையில், ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ராமதாஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
இதனிடையே, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக டாக்டர் ராமதாஸ் செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாமக உரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ராமதாசுக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக ராமதாஸ் மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன? என்பதை அன்புமணி தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.