வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜித் குமார் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் 18 காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயிலுக்குப் பின்புறமுள்ள யாருமில்லாத தோட்டத்தில், கடந்த 28 ஆம் தேதி காவலாளி அஜித்குமாரை, கம்பத்தில் கட்டிவைத்து காவல் துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை அஜித்குமாரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், அந்த வீடியோவில் சீருடையணியாத காவல் துறை அதிகாரிகள் இருவர் அஜித் குமாரைக் கட்டிவைத்து பிரம்பால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று திருபுவனம் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.