செய்திகள்

சாதிப்பெயர் போடக்கூடாது! போலீஸ் எஸ்.பி. அதிரடி கட்டளை

Staff Writer

மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்ட எஸ்.பி. காவலர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போடக்கூடாது என கட்டளையிட்டுள்ளார். காவல் துறையில் சாதிய ரீதியான பாகுபாட்டைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட காவல் துறையில் சாதிய ரீதியான பாகுபாடுகள் அதிகம் இருப்பதாக புகார்கள் எழுந்தது. சமீபத்தில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் வன்ஜாரி சமூகத்தைச் சேர்ந்த சிலரால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாா் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் தனஞ்ஜய் முண்டேயின் உதவியாளருக்குத் தொடா்பு இருந்ததால், முண்டே பதவி விலகினார்.

இந்த கொலைக்குப் பிறகு பீட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நவ்னீத் கன்வத் நியமிக்கப்பட்டார். இவர், பீட் மாவட்டத்தில் சாதிய பிரச்னை தலைதூக்காமல் இருக்க காவலர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிய பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என கட்டளை விதித்துள்ளார்.

இது தவிர காவல் நிலையங்களில் ஆய்வாளர் உள்ளிட்டோரின் மேஜைகளில் உள்ள பெயா் பலகையிலிருந்து சாதிப்பெயா் நீக்கப்பட்டுள்ளது.