தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்கடையால் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி 4ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:
“கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை மாநில அரசு தான் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது போல, ஒரு தவறான தகவலை பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சியினர் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது.
கச்சத்தீவை பொறுத்தவரை அந்த தீவை ஒப்பந்தம் போட்டபோது முதல்வராக இருந்த கலைஞர் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார் என்று எடுத்து சொன்னார். கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டார்.
அன்றைக்கு இருந்த திமுக எம்.பி-க்கள் இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிசாமி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இதை கடுமையாக எதிர்த்தனர். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.06.1974 அன்று கையெழுத்தானவுடன் மறுநாளே 29.06.1974 அன்று முதல்வர் கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டத்தை தலைமை செயலகத்தில் கூட்டி அதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தினமே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்கு கலைஞர் தெரிவித்தார் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே 21.08.1994 அன்று இந்தியாவுக்கு சொந்தமானதும் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தது.
மத்திய அரசு இதை பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியவர் கலைஞர்.
கச்சத்தீவை மீட்கவும் கச்சத்தீவில் உள்ள இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளேன்.
அரசு முறை பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்றார்.