தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க. பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அக்கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக, ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கட்சியினர் கைதுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
“தமிழகத்தை பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
அ.தி.மு.க.வை கண்டாலே இந்த தி.மு.க. அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும், சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.